காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரால் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் இணையசேவை முடக்கம் செய்யப்பட்டதோடு, ஸ்ரீநகரில் உள்ள பெரும்பாலான கடைகளும் வணிக நிறுவனங்களும் தொடர்ந்து இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளன என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக நௌஹட்டா, கோஜ்வாரா, கன்யார், சஃபாகடல், நவகடல், ரஜோரி கடல் மற்றும் எம்ஆர் கஞ்ச் போன்ற ஸ்ரீநகரின் உட்பகுதிகளில் வேலைநிறுத்தம் அதிகம் காணப்பட்டுள்ளது. ஆனாலும், போக்குவரத்து வழக்கம் போல் இயங்குவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நவம்பர் 24 அன்று, ஸ்ரீநகரில் ராம்பாக் பகுதியில், பொதுமக்கள் படுகொலைகளில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) என்ற அமைப்பின் தளபதி உட்பட மூன்று பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.
முன்னதாக, நவம்பர் 15 ஆம் தேதி ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியில் காவல்துறையும் ராணுவமும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நான்கு பேரின் உடலையும் காவல்துறையினர் ஹைதர்பூரா பகுதியிலேயே புதைத்துவிட்டனர். உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இரண்டு பேரின் உடல்களை மட்டும் தற்போது உறவினர்களிடம் காவல்துறை ஒப்படைத்தது. இதற்கிடையில், ஹைதர்போரா துப்பாக்கிச் சூடு தொடர்பாக, மாவட்ட நீதிபதி விசாரணைக்கு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.