Aran Sei

‘ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்’ – ராமதாஸ் வலியுறுத்தல்

திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட முன்வரைவை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (செப்டம்பர் 9), ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதன் பின்னணி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ள ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7 லட்சத்தை இழந்ததால்தான் அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்ற 24 வயது இளம் ஆயுதப்படை காவலர், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த 4-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். நல்வாய்ப்பாக துப்பாக்கி குண்டு அவரது மூளையைத் தாக்காததால் உயிர் பிழைத்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவருகிறார்.

அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் ரூ.7 லட்சம் அளவுக்குக் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாகவும், அதைத் தாங்கிக்கொள்ள முடியாததால்தான் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. எந்த சோகம் நடக்கக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் நினைத்ததோ அந்த சோகம் நடந்திருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டோபஸின் கொடுங்கரங்களுக்குள் சிக்கிய வேலுச்சாமி என்ற இளம் காவலர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார். அவர் விரைவில் உடல் நலம் தேற விழைகிறேன்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழும் 2-வது விரும்பத்தகாத சம்பவம் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் 20-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், சேர்ந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற இளம் தந்தை லட்சக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தமது மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்போது காவலர் வேலுச்சாமி கொடூரமான முறையில் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியிருக்கிறார்.

இத்தகைய கொடுமைகளும் சோகங்களும் இனியும் நடக்காமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அதற்கான ஒரே தீர்வு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றுவதே ஆகும்.

ஆன்லைன் சூதாட்டம் உடனடியாகத் தடை செய்யப்படாவிட்டால் ஏராளமான இளைஞர்கள் சொந்தப் பணத்தையும் கடன் வாங்கிய பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க முடியாது.

மது, புகையிலை, பரிசுச் சீட்டு ஆகியவற்றைப் போன்று ஆன்லைன் சூதாட்டத்தாலும் ஏராளமான குடும்பங்கள் சீரழிகின்றன என்ற உண்மையை உணர்ந்துதான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வருகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை 25-க்கும் அதிகமாகும். இனியும் ஆன்லைன் சூதாட்டம் தொடரக் கூடாது என்று நான் வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே, கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின், அதற்கு மாற்றாக சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அவசரச் சட்டம் இயற்றப்பட்ட நாளிலிருந்து அந்தச் சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 3-ம் தேதி வரை ஆன்லைன் சூதாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் எவரும் பாதிக்கப்படவில்லை.

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு பலவகையான ஆன்லைன் சூதாட்டங்கள் இளைஞர்களின் வாழ்க்கையை முன்பை விட வேகமாக சூறையாடிக் கொண்டிருக்கின்றன.

நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை இயற்றுவதுதான் இதற்குத் தீர்வாகும். இதை சென்னை உயர் நீதிமன்றமும் இரு தருணங்களில் உறுதி செய்திருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட முன்வரைவை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தொடர்புடைய பதிவுகள்:

ஆன்லைன் சூதாட்டத்தை  தடை விதித்த தமிழக அரசின் சட்ட திருத்தம் – ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை – அமலாகும் அவசரச் சட்டம்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை – எடப்பாடி அறிவிப்பு, ஸ்டாலின் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்