Aran Sei

‘தாய்மொழியுடன் இந்தியையும் பயன்படுத்தக் கட்டாயப்படுத்துவது, இந்தியைத் திணிக்கும் செயல்’ – அமித் ஷாவுக்கு ராமதாஸ் கண்டனம்

ந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று அமித்ஷா கூறியது, மறைமுகமாக இந்தியத் திணிக்கும் செயலாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று (செப்டம்பர் 14), இந்தி மொழி தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசியுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  “இந்தி தினமான இன்று நாட்டு மக்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியையும் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக முக்கியமான ஒன்றாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தாய்மொழியுடன் அலுவல் மொழியையும் சேர்த்துப் பயன்படுத்துவதில்தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதற்கு, ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘அறிவியல் முனைப்பிற்கும் ஆங்கிலம், இந்திக்கும் என்ன சம்பந்தம்?’- திறனறித் தேர்வில் தமிழை புறக்கணிப்பதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். இது மறைமுகமாக இந்தியத் திணிக்கும் செயலாகும்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்று கூறுவதில் ஏராளமான பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு… அவ்வாறு கூறக்கூடாது.” என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது. அந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மொழிச்சமநிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்