விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு துரோகம் இழைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத், நீண்ட போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு ஏன் இழப்பீடு வழங்கப்படவில்லை என்பது குறித்தும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படுவதை ஆராய அமைப்பதாக சொன்ன குழுவை ஏன் அமைக்கவில்லை என்பது குறித்தும் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் ராகேஷ் திகாயத், “நம் நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்ததன் வழியாக, அவர்களின் காயத்தில் உப்பைத் தேய்துள்ளது ஒன்றிய அரசு. நாட்டில் உள்ள விவசாயிகள் ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்பது இத்துரோகத்தின் வழியாக தெளிவாகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற ஒருங்கிணைந்த குழுவின் கீழ் டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தின.
விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும் சட்டப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டன. அதனையடுத்து, டிசம்பரில் டெல்லி எல்லைகளில் இருந்த போராட்டக்களங்களை விவசாயிகள் காலி செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம்(ஜனவரி 30), ‘துரோக தினத்தை’ நாடு தழுவிய அளவில் கடைபிடிக்க வேண்டும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் அழைப்பு விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, நேற்று(ஜனவரி 31), ‘துரோக தினம்’ அனுசரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.