Aran Sei

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது : டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மாலை முடிவெடுக்கப்படும்

credits : new indian express

ஐதராபாத் அப்போல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோர் மாதம், ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பாக அவர் எழுதியதாக கூறப்பட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த கடிதத்தில் ”2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று உயிர்பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்குச் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரிலுள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.” என்று கூறப்பட்டிருந்தது.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி – ரத்தஅழுத்த மாறுபாட்டிற்காக சிகிச்சை

”இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம்” என்று மருத்துவர்கள் ரஜினிகாந்தை எச்சரித்துள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடல்நலப் பிரச்சனையால் கட்சி தொடங்குவது தடைபடுகிறதா? : ரஜினிகாந்த்

”எனவே, இந்தக் கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று மருத்துவர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்கள் என ரஜினி எழுதியதாக கூறப்பட்ட அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை” என்று பதிவிட்டிருந்தார்.

மருத்துவர்களின் எச்சரிக்கைகளை மீறி, நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 3-ம் தேதியன்று, அடுத்து ஆண்டு ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு விடுத்தார். பின்னர், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அவர் நடித்துவரும் அண்ணாத்த படப்பிடிப்புக்காக கடந்த டிசம்பர் 15-ம் தேதியன்று ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றார்.

அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கி 8 நாட்களுக்குப் பிறகு (கடந்த டிசம்பர் 23-ம் தேதி) அண்ணாத்த படக்குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு நபர்களுக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு காரணம் கருதி படப்பிடிப்பை ரத்து செய்வதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் இயல்பிலேயே எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டார். ஆனால் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என சோதனை முடிவுகள் வந்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவிப்பு – கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக ஓபிஎஸ் தகவல்

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து நேற்று அப்போல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ”அவருக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் இல்லை. ஆனால் அவருடைய ரத்த அழுத்தத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதை பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு அவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பாக மற்றொரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விளக்கம் தருவாயோ வதந்தியே?

அந்த அறிக்கையில் ”ரஜினிகாந்தின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவரது ரத்த அழுத்தம் உயர்ந்து காணப்பட்டாலும் அது நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில், கட்டுக்கள் இருக்கிறது. இதுவரை செய்யப்பட்ட பரிசோதனையில் அவருடைய உடல்நிலையில் பெரிய பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை. அவர், இன்று மற்றோரு கட்ட பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறார், அதன் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ஒய்வெடுக்க அறிவுறுத்தியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரத்த அழுத்தங்கள் சீராக இல்லாததால் அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிகோடிங் ரஜினிகாந்த்: அரசியல் ஹீரோவா? வில்லனா? – மகிழ்நன் பாம

 

தொடர் கண்காணிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவரை மருத்துவமனையில் இருந்து அனுப்புவது (Discharge) குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என அப்போல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்