நீண்டகாலமாகத் தனது அரசியல் பிரவேசம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக கருத்து தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது, ஜனவரி மாதம் கட்சி தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் இறுதியில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் ரஜினி அறிவித்தார். அதன் பின்னர், அவர் தீவிர அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை கூறிவந்தார்.
கடந்த நவம்பர் 30-ம் தேதி, ரஜினிகாந்த் தனது மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தொடங்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது, 2021-ம் ஆண்டு, ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், டிசம்பர் மாதம் 31-ம் தேதி கட்சியைக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻 pic.twitter.com/9tqdnIJEml— Rajinikanth (@rajinikanth) December 3, 2020
முன்னதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்ட ரஜினி, “வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்.
“அதிசயம்…அற்புதம்…நிகழும்!!!” என அவர் பதிவிட்டுள்ளார். #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல, #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் போன்ற ஹாஷ்டகுகளைப் பயன்படுத்தி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, தனது சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “2017 டிசம்பர் 31 அன்று சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் கட்சி ஆரம்பித்து மக்களைச் சந்தித்து, 234 தொகுதியிலும் போட்டியிடுவேன் என்று கூறினேன். அதன்பின்னர் மக்களிடையே எழுச்சி வர வேண்டும் எனக் கூறினேன்” என்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும் “ஆனால், அதை என்னால் செய்ய முடியவில்லை. எனக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மக்களைச் சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், மருத்துவர்கள் கொரோனா பேரிடரால் வெளியே செல்வது ஆபத்து எனத் தெரிவித்தனர். தற்போது அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் கட்டாயம். அன்று சொன்னதுதான் இன்றும் சொல்கிறேன். கொடுத்தவாக்கில் தவறமாட்டேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. சந்தோஷம்தான்! என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் எனக் களம் இறங்கி உள்ளேன். அரசியல் மாற்றம் தேவை, அது கட்டாயம் நிகழும்” என்று அவர் தெரிவித்தார்.
“நான் ஏற்கெனவே உயிருக்குப் போராடியபோது தமிழக மக்கள் செய்த பிரார்த்தனையால் உயிர் பிழைத்து வந்தேன். நான் வெற்றி பெற்றாலும் அது மக்களின் வெற்றி. நான் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை! மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்! தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும். அரசியல் மாற்றம் நடக்கும். மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்!” என்றும் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சன் நியூஸ் தொலைக்காட்சியில் அளித்தப் பேட்டியில் , “வருவார், வருவார் என்று பல 10 ஆண்டுகளாகக் காத்து கிடந்த நிலையில் தற்போது ரஜினி காந்த் துணிந்து ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அண்மையில் கூட, உடல் நலன் கருதி அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியானது. அவர் உடல்நிலை முக்கியமானது, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது முதன்மையானது என்று நான் கருத்துக் கூறியிருந்தேன்” எனக் கூறியுள்ளார்.
#JUSTIN | ”தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக யாரை நியமித்திருக்கிறார் என்பதன் மூலம் அவர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறாரோ என்கிற அய்யம் எழுகிறது” – ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்#SunNews | @rajinikanth | @thirumaofficial pic.twitter.com/vtN0cNixjD
— Sun News (@sunnewstamil) December 3, 2020
கட்சி தொடங்கவுள்ள ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திருமாவளவன் குறுகிய காலத்தில் கட்சியைத் தொடங்கி ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்று ரஜினி காந்தின் நம்பிக்கை அதீத நம்பிக்கை என்று கூறியுள்ளார்.
“ரஜினிகாந்த் ஆன்மீகத்துக்கு என்ன வரையறை வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. மதம், ஜாதி அனைத்தையும் இணைத்துதான் ஆன்மீகத்தோடு பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அதைத் தவிர்த்துவிட்டு, பிரித்துவிட்டு எப்படி அரசியல் நடத்துவார் என்பது புரியவில்லை” என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
“நேரடியாக, பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ரஜினிகாந்த் மூலமாக மதவெறி அரசியலைத் திணிக்கப் பாஜக பார்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது” எனவும் திருமாவளவன் தன்னுடைய சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அரண்செய்யுடன் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், “‘எனக்கு உடல் நிலை சீராக இல்லை. இருப்பினும் உங்களுக்காக நான் அரசியல் களம் காண்கிறேன்’ என்று ஒருவர் கூறுவது சாதுரியமான அரசியல் என்று நான் பார்க்கிறேன். ரஜினி அரசியல் தொடங்குவதற்கு முன்பே குருமூர்த்தி, ராம கோபாலன் (காலமாவதற்கு முன்), அர்ஜுன் சம்பத் ஆகியோர் அவரைச் சந்தித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் பிரதமர் நரேந்திர மோடியே அவரை சந்தித்துள்ளார்” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
“இவர்கள் பெரும்பலும் வலது சரிகளாகவே உள்ளனர். எனவே, அவர் மீது வலது சரிகளின் அழுத்தம் இருப்பதாக நான் பார்க்கிறேன்” என்றும் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களின் சந்திப்பின்போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தி என்பவரை ரஜினி அறிமுகம் செய்தார். இவர் பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தவர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற வெற்றிவேல் யாத்திரையில் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
தற்போது, நடிகர் ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தி நியமிக்கப்பட்டதை அடுத்து, அவரது வேல் யாத்திரை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், அர்ஜூன் மூர்த்தி பாஜகவிலிருந்த ராஜினமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமாவை பாஜகவின் மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் ஏற்று கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்றுள்ளார். ரஜினியுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என பதில் அளித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.