Aran Sei

ராமர் கோவிலுக்காக காங்கிரஸ் நிதி திரட்டல் – காட்டுப்பகுதியில் மணற்கல் எடுப்பதற்கு ராஜஸ்தான் அரசு அனுமதி

ராமர் கோயில் கட்ட தேவைப்படும் ‘மணற்கல்’ இருக்கும் பகுதியில் சுரங்கம் அமைக்க ஏற்ற வகையில், நிலத்தை விடுவித்து ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 29 ஆம் தேதி ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தலைமையில் கூடிய ராஜஸ்தான் வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு, சுரங்க பணிகள் காரணமாக, சீரமைக்க முடியாத பாதிப்பு ஏற்பட்டுள்ள மூன்று பகுதிகளை விடுவிப்பதன் மூலம், பாரத்பூர் பந்த் பரேதா வனவிலங்கு சரணாலயத்தை தென் மேற்காக மாற்றும் முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிட்டப்பட்ட 7 சதுர மீட்டர் நில இழப்பை ஈடு செய்யும் விதமாக, 198 சதுர  மீட்டர் காட்டுப் பகுதி, சரணாலயப் பகுதியோடு சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரணாலயத்தின் எல்லைகள் மறுசீரமைப்பின் மூலமாக, அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்குத் தேவைப்படும், வெளிர் சிவப்பு நிற, பன்சி பஹார்பூர் மணற்கல்லை எடுப்பதற்கான, சுரங்கம் அமைக்க அனுமதிக்கப்படலாமென அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முழு அடைப்பு காலத்தில் பணப்பையை இறுக்கிக் கொண்ட மத்திய அரசு – மகேஷ் வியாஸ்

சரணாலயத்தின் எல்லைகள் மறுசீரமைப்பு முழுவதுமாக முடிவடைந்த பின்னர், மணற்கற்களை வெட்டி எடுக்க, புதிய ஒப்பந்தங்கள் கோரப்படும் என ராஜஸ்தான் சுரங்கத்துறை தெரிவித்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

ராமர் கோயில் கட்ட உதவும் வகையில், ராஜஸ்தான் அரசு நிலத்தை விடுவித்திருக்கும் நிலையில், ராமர் கோயில் கட்ட நன்கொடை திரட்ட ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி சார்பாகப் பிரச்சாரம் தொடங்கப்பட்டு இருப்பதாகத் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

Photo Credit : Thewire.in

ராமர் கோவில் கட்ட நிதி திரட்டும் விதமான பிரச்சாரங்களைப் பல்வேறு மாநிலங்களில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற மாணவர் அமைப்பான ஏபிவிபியும், சங்க பரிவார் அமைப்புகளும் மேற்கொண்டு வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான, இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் தற்போது ராமர் கோவிலுக்கு நிதி திரட்டும் பணியை மேற்கொண்டிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள கல்லூரியில், “ராமரின் பெயரில் ஒரு ரூபாய்” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அம்மாநில இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் அபிஷேக் சவுத்ரி, ராமர் கோயில் பெயரில் பாஜகவும், ஏபிவிபியும் கொள்ளையடிக்கின்றனர் என்று குற்றம்சாட்டியதாக அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் – கிரேட்டா துன்பெர்க் ஆதரவு, ரிஹான்னாவுக்கு கங்கனா பதில்

”எங்களின் இந்தப் பிரச்சாரத்தின் மூலம், பாஜக மற்றும் ஏபிவிபியின் நடவடிக்கைகளை எதிர்க்கிறோம். ஏனென்றால், ராமர் கோயில் அனைத்து மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வைத்து மக்களிடமிருந்து லட்சங்கள் மற்றும் கோடிகளில் பணம் பெறுவது தவறானது” என இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ரமேஷ் பைதி கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிகளிலும் நிதி திரட்டும் விதமாக இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர், 15 நாட்களுக்கு மேற்கொள்ளும் பிரச்சாரம் மூலமாகக் கிடைக்கும் தொகை, ராமர் கோயில் பொறுப்பாளர்களிடம் வழங்கப்படும் என ரமேஷ் பைதி தெரிவித்திருப்பதாக தி வயர் கூறியுள்ளது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்