Aran Sei

‘ராஜஸ்தானில் சிறுநீர் குடிக்க வைத்து இளைஞர் துன்புறுத்தல்’ – எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 25 வயது தலித் இளைஞனை, முன்விரோதம் காரணமாக எட்டு பேர் கடத்திச் சென்று, தாக்குதல் நடத்தியதோடு, சிறுநீரைக் குடிக்க வற்புறுத்தியுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 27ஆம் தேதி, ருக்காசர் கிராமத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட ராகேஷ் மேக்வால் அளித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவரை முந்தைய நாள் இரவு 11 மணியளவில் அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, அவர்கள் ராகேஷ் மேக்வாலை மதுபானம் குடிக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். பின்னர், அவர்கள் அதே பாட்டிலில் சிறுநீர் கழித்து, அதை அவரது வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளனர் என்று ராகேஷ் மேக்வால் ரத்தன்கர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

ஆசிட் வீச்சுக்கு உள்ளான தலித் கிறிஸ்தவ சிறுவன் மரணம் – தேவாலயத்திற்கு செல்லக்கூடாதென மிரட்டிய இந்துத்துவவாதிகளால் கொல்லப்பட்டாரா?

குற்றம் சாட்டப்பட்டவர்களால் தான் சாதியரீதியாக அவதூறு செய்யப்பட்டதாகவும், ‘செல்வாக்கு மிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்களான எங்களுடன்மோதும் தலித்துகளுக்கு பாடம் புகட்டப்படும்’ என அவர்கள் கூறியதாகவும் அப்புகாரில் ராகேஷ் மேக்வால் குறிப்பிட்டுள்ளார்.

ராகேஷ் மேக்வாலின் முதுகில் இருந்த காயங்கள் அவர் தாக்கப்பட்டதை உறுதி செய்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசியுள்ள விசாரணை அதிகாரியும் ரத்தன்கர் காவல்துறை அதிகாரியுமான ஹிமான்ஷு ஷர்மா,  “ராகேஷ் மேல்வால் தாக்கப்பட்டது உறுதியானது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் சிறுநீர் குடிக்க வற்புறுத்தப்பட்டாரா என்பது இன்னும் நிறுவப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

தலித் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படாதது ஏன்? – சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவோடு ஒரு நேர்காணல்

குற்றம் சாட்டப்பட்ட உமேஷ் மற்றும் பீர்பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அக்ஷய், ராஜேஷ், ராகேஷ், தாராசந்த், பிடாதிசந்த் மற்றும் தினேஷ் ஆகிய குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 143 (சட்டவிரோத கூட்டம் சேர்த்தது), 323 (காயப்படுத்துதல்), 365 (கடத்தல்), 382 (இறப்பு அல்லது காயம்  உண்டாக்கி, திருடுவது) மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மீட்கப்பட்டுள்ளது.

சாங்(chang) என்ற அப்பகுதியில் உள்ள இசைக்கருவியை ஹோலி பண்டிகையின்போது ராகேஷ் மேக்வால் வாசித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், இதுதான் இப்பிரச்சனையின் தொடக்கம் எனவும் ராகேஷ் மோக்வால் தெரிவித்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்