Aran Sei

பசுக்காவலர்களால் சிறுவன் வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட அவலம் – 3 பேரைக் கைது செய்த ராஜஸ்தான் காவல்துறை

Image Credits: The Print

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில், 17 வயது சிறுவன்மீது வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்டது தொடர்பாக 3 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பெயரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் – ஹரியானா எல்லையில் அமைந்துள்ள பிவாடி பகுதியில் உள்ள சுபான்கி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பசு கடத்தப்படுவதாக சொல்லப்பட்ட லாரியை, பசு காவலர்கள் என்று அழைத்துக்கொள்ளும் கும்பல் துரத்தியபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அல்வார் மாவட்டத்தில் இது போன்ற நிகழ்வு நடப்பது இது முதல் முறையல்ல, 2017 ஆம் ஆண்டு பெஹ்லு கான் என்ற பால் வியாபாரியும், 2018 ஆம் ஆண்டு  ரக்பர் கான் என்ற நபரும், அவர்களது சொந்த பசுக்களை வீட்டுற்கு கொண்டு செல்லும் வழியில் மறிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

உயிரிழந்த சிறுவனின் பெயர் சபீர் கான் என்றும், அவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சபீர் கானின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பெயரில் 7 பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அதில் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

”சோனு, ஹர்கேஷ், நரேந்திரா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற நான்கு பேர் தலைமறைவாகியுள்ளனர்” என சுபாங்கி காவல்நிலைய அதிகாரி முகேஷ் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.

மேலும், “குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை), 143 (சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுதல்) மற்றும் 506 (கிரிமினல் திட்டமிடலுக்கான தண்டனை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிவாடி வட்ட காவல் அதிகாரி ஹரி ராம் குமாவத், “15 பசுக்களை ஏற்றிச் சென்ற லாரி ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டம், தௌரு பகுதியில் உள்ள ஒரு மரத்தின் மீது மோடி நின்றுவிட்டது. பசு மாடுகள் கடத்தப்பட்டது தொடர்பாக ஹரியானா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என கூறியுள்ளார்.

சபீர் கான் மீது மோதிய இரண்டு வாகனங்களில் ஒன்று கடத்தல்காரர்களுடையது என்றும், இரண்டாவது பசு காவலர்கள் உடையது என்றும் குமாவத் தெரிவித்திருக்கும் நிலையில், இதனை மறுக்கும் சபீரின் குடும்பத்தினர், இரண்டு வாகனங்களும் பசு காவலர்களுடையது தான் என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பசு பாதுகாவலர்களை பாதுகாப்பதற்காக காவல்துறையினர் இந்த விசயத்தைத் திசை திருப்புவதாக சபீரின் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : The Wire

தொடர்புடைய செய்திகள் :

பசு வதையைத் தடுக்காத காவல்துறையினர் – இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட காவல் கண்காணிப்பாளர்

உத்திரபிரதேசத்தில் பசுக் காவலர்களால் தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர் – பாதிக்கப்பட்டவர் மீது வழக்குப் பதிந்த காவல்துறை

பசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது

பசுவை கொல்பவரை மனிதரை கொன்றவராக கருத வேண்டும் – மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்