Aran Sei

பெகசிஸ் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

பெகசிஸ் விவகாரத்தில் குழப்பத்தை போக்க பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று(ஜனவரி 30), ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள அசோக் கெலாட், தேசத் தந்தையை படுகொலை செய்தவரின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் நம் நாட்டை ஆள்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாடாளுமன்றத்திற்குள் நுழைகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

2017 இல் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிடம் இருந்து பெகசிஸ் ஸ்பைவேரை இந்தியா வாங்கியதாக கூறும் நியூயார்க் டைம்ஸின் அறிக்கை குறித்து பேசியுள்ள அவர், “இவ்விவகாரத்தில் எழும் சர்ச்சைகளை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றிய அரசு சொல்வது உண்மையாக இருந்தால், பிரதமர் மோடி தானே முன்வந்து நாட்டு மக்களிடம் உரையாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு – ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருக்கு எதிராக சிறப்புரிமைத் தீர்மானத்தைக் கோரும் காங்கிரஸ்

“உச்ச நீதிமன்றம் பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்து விசாரணை செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. இதற்கு யாரை குற்றம் சொல்ல? உளவு பார்த்த விவகாரத்தில் ரிச்சர்ட் நிக்சன் தனது அமெரிக்க அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. ஆட்சியில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு இருந்தால், அவர்களைக் குறிவைத்து, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை அனுப்பி வைக்கும் சூழல் உள்ள நாட்டில்தான் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்” என்று அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் தங்கள் சித்தாந்தத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் எழுதும் மக்களை தாக்குவதற்காக நாடு முழுவதும் ட்ரோல் ஆர்மியை உருவாக்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் நீங்கள் எதையாவது எழுதினால், லட்சக் கணக்கில் பணம் கொடுத்து அமர்த்தப்பட்ட ஆர்எஸ்எஸ், பாஜகவின் ட்ரோல் ஆர்மி உங்களை தாக்க வரும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெகசிஸ் விவகாரம்: ‘ஜனநாயகத்தை வெட்கக்கேடான முறையில் அபகரிக்கும் செயல்’ – காங்கிரஸ் விமர்சனம்

“ஒரு ஜனநாயக தேசத்தில் கருத்து வேறுபாடுகளும், விமர்சனங்களும் வரவேற்கப்படும். ஆனால், இன்று விமர்சனம் வைத்தால் தேசவிரோதியாக அறிவிக்கப்படுகிறீர்கள். நம் நாடு எத்திசையில் போய் கொண்டிருக்கிறது? இது ஒவ்வொரு குடிமகனுக்கும் கவலை தரும் விஷயமாக இருக்க வேண்டும்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்