Aran Sei

மழையால் பாதித்த விவசாயிகள்: நிவாரணத்தொகை வழங்க ஸ்டாலின் கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்து; சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30000 மற்றும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், தொடர்ச்சியாகப் பெய்த மார்கழி மழையில், அடியோடு மூழ்கி, பொங்கல் விழா நேரத்தில் விவசாயிகள் அனைவரும் பெருந்துயருக்கும், பேரிழப்பிற்கும் உள்ளாகியிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்த அவர், நிவர் புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, இந்த ‘மார்கழி மழை’ பேரிடியாகவே வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘சசிகலாவை சாக்கடையுடன் ஒப்பிடும் குருமூர்த்தி; அமைதிகாத்து ஆமோதிக்கிறதா அதிமுக?’ – திமுக கேள்வி

“அ.தி.மு.க. அரசு உரிய முறையில் அணுகுவதாகத் தெரியவில்லை. வடி வாய்க்கால்களைத் தூர்வாரும் பணியில் கோட்டை விட்ட அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும் கோட்டை விட்டு – குறட்டை விட்டுத் தூங்குகிறது” என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நிவர் புயல் பாதிப்பிற்குள்ளான நிலங்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை ஏற்காத அ.தி.மு.க. அரசு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று செய்த அறிவிப்பு, விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும்,. அறிவிக்கப்பட்ட அந்த நிவாரணமும் இன்னும் முழுமையாக விவசாயிகளின் கைகளுக்கு வந்து சேரவில்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமுறுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கும் குருமூர்த்தி : டிடிவி தினகரன் கிண்டல்

“பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையும் பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. இப்போது பெய்துள்ள கனமழையால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு மேல் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி, அரசின் நிவாரணம் ஏதும் இதுவரை கிடைக்காமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்றும் திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.

15 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்: தனியுரிமை கொள்கையைத் தள்ளி வைத்த வாட்ஸ்அப் நிறுவனம்

வேளாண் நிலங்களில் கடல் போல் நிரம்பியிருக்கும் தண்ணீரையும் அதில் மூழ்கிக் கிடக்கும் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்களையும் பார்த்து விவசாயிகள் கண்கலங்கி, கையறு நிலையில் புலம்பி நிற்பதை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின்,.ஏற்கனவே நிவர் புயலுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 600 கோடி ரூபாய் நிவாரணத் தொகை என்ன ஆனது என்றும் எத்தனை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் போய்ச் சேர்ந்தது என்றும் மத்திய பா.ஜ.க. அரசிடம் கோரிய 3758 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

இதுபோன்ற சூழலில், நாசமாகியுள்ள நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், ‘இனிமேல்தான் கணக்கு எடுக்கப் போகிறோம்’ என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலிருக்கிறது என்று கூறியுள்ளார்.

’முழு ஆய்வு முடியாத கோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம்’ – திருமாவளவன் வலியுறுத்தல்

‘மார்கழி மழையால்’ பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என்றும்; ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்குவதை உறுதி செய்து, பயிர்க் காப்பீட்டுத் தொகையும் எவ்வித தாமதமுமின்றி கிடைப்பதற்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்