Aran Sei

‘பணியின்போது கொரோனாவால் இறந்த 1,500 ரயில்வே ஊழியர்கள்; பாரபட்சமின்றி உரிய இழப்பீடு வேண்டும்’ – ரயில்வே ஊழியர்கள் சங்கம்

கொரோனா தொற்றுநோயால் சுமார் 1,500 ரயில்வே ஊழியர்கள் இறந்துள்ளனர் என்றும் அவர்களிடம் பாரபட்சம் காட்டாது, உரிய இழப்பீட்டை வழங்கினால், அக்குடும்பங்களுக்கு  பேருதவியாக இருக்கும் என்றும் அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஒன்றிய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா எழுதிய கடிதத்தில்,  “கொரோனா தொற்றுநோயால் சுமார் 1,500 ரயில்வே ஊழியர்கள் இறந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 65,000 க்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து மீண்டு, தங்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். இதுகுறித்த உங்களின் பாராட்டுக் கடிதமானது அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டி ஊக்கமளிக்கும் அதே வேளையில், அவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கினால், அக்குடும்பங்களுக்கு  பேருதவியாக இருக்கும்.” என்று கோரியுள்ளார்.

ரயில்வே பணியாளர்கள் 93,000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – சிக்கலின்றி ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை

“இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் 24  மணி நேரமும் பணியில் ஈடுபட்டு, அதற்காக தங்களின் உயிரை அர்பணிக்கும் தொழிலாளர்களிடையே பாரபட்சத்தை கடைப்பிடிக்க கூடாது என்பதை நாங்கள் தொடக்கத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும், பணியில் இருக்கும்பொழுது தொற்றால் உயிரிழந்த மருத்துவ ஊழியர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள், துப்புரவுப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீடாக ரூ .50 லட்சம் வழங்கப்படும் நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு ரூ .25 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது.” என்று அக்கடிதத்தில் சிவ கோபால் மிஸ்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பாரபட்சம் அகற்றபப்ட்டு, ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மன உறுதியை உயர்த்தும் பொருட்டு, ரூ .50 லட்சம் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்