Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

அக்டோபர் 3 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கி அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டினர்.

அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.

‘மக்கள் பிரதிநிதிகளை அனுமதிக்காதது ஏன்? உத்தரபிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது?’ – சஞ்சய் ராவத்

வன்முறை நடைபெற்ற அன்று இரவு, ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி லக்கிம்பூர் கேரிக்கு செல்ல முயன்றபோது, உத்தரபிரதேச காவல்துறையால் தடுக்கப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். நேற்று(அக்டோபர் 6) மாலை, பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.

லக்கிம்பூர் கேரிக்கு செல்ல சிறப்பு அனுமதி பெற்று லக்னோ விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பேகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி ஆகியோர் சொந்த வாகனங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து லக்னோ விமான நிலையத்தில் தர்ணாவில் ராகுல் காந்தி ஈடுபட்டார். சிறிது நேரத்துக்குப் பிறகு ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால், தாங்கள் ஏற்பாடு செய்யும் காரில்தான் செல்ல வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளது.

இதை ஏற்க மறுத்துள்ள ராகுல் காந்தி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது வாகனத்திலேயே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

லக்கீம்பூர் வன்முறை: அஜய் குமார் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் – பிரதமருக்கு சிபிஎம் எம்.பி கடிதம்

பின்னர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, பூபேஷ் பாகேல், சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் லக்கிம்பூருக்கு சென்றுள்ளனர். நேற்று(அக்டோபர் 6) இரவு, லக்கிம்பூர் வந்தடைந்தவர்கள், அங்கு வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்