Aran Sei

மாணவர்களின் துன்பத்தைக் கண்டும் கண்மூடி இருக்கிறது ஒன்றிய அரசு – நீட் தேர்வு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

நீட் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய அரசிடம் கேட்டுகொண்டுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். சிபிஎஸ்இ விருப்பத் தேர்வு நடைபெறும் நிலையில் நீட் நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி கான்வில்கர் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சோயப் ஆலம் ஆஜராகி வாதாடினார். ‘‘சிபிஎஸ்இ விருப்பத் தேர்வை எழுதும் சுமார் 25,000 மாணவ, மாணவியர் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் 9-ம் தேதி இயற்பியல் தேர்வு நடைபெற உள்ளது. அடுத்தடுத்து செப்டம்பர் 15 வரை தேர்வுகள் நீடிக்கின்றன. நாங்கள் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரவில்லை. விருப்ப தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி தேர்வை தள்ளி வைக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை கூறும்போது, “நீட் நுழைவுத் தேர்வுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வை தள்ளிவைக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிபதிகள் சிபிஎஸ்இ விருப்பத் தேர்வை குறைந்த அளவு மாணவர்கள் மட்டுமே எழுதுகின்றனர். அவர்களுக்காக நீட் நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க முடியாது. ஏற்கெனவே திட்டமிட்டபடி செப்டம்பர் 12-ம்தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறலாம் என்று கூறி நீட் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், நீட் தேர்வை இந்திய ஒன்றிய அரசு தள்ளி வைக்க வேண்டும். மாணவர்கள் மீது சுமத்தப்படும் நெருக்கடியை ஒன்றிய அரசு குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்