தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்துகொள்ளாமல் நம் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நேற்று (பிப்ரவரி 28), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அந்நூலை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமை ஏற்க, பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்துள்ளார். மாநில மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வரவேற்புரை ஆற்றியுள்ளார்.
‘மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது’ –கேரள முதலமைச்சர்
சிறப்பு அழைப்பாளராக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது விழாவில் பேசியுள்ள ராகுல் காந்தி,
“தமிழ்நாட்டுக்கு வரக்கூடியது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. இதை நான் மேலோட்டமாகச் சொல்லவில்லை. எனது அடிமனதின் ஆழத்திலிருந்து இதை நான் குறிப்பிடுகிறேன். சில நாட்களுக்கு முன்னால், நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் பாராட்டியதை நான் அறிவேன். நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது, பத்திரிகையாளர்களைப் பார்த்தேன். அதில் ஒருவர், உங்களுடைய உரையில் என்ன காரணத்திற்காக தமிழ்நாடு குறித்து குறிப்பிட்டீர்கள்?’ என கேட்டார்.
‘காஷ்மீர் மக்களுக்காக தமிழ்நாடு தோளோடு தோள் நின்றதை மறக்கமாட்டோம்’ –உமர் அப்துல்லா
அப்போதுதான் நானும் கவனித்தேன், தமிழ்நாடு குறித்து நான் பலமுறை குறிப்பிட்டதை. மேலும் நான் வெளியே வந்தபோது, என்னை அறியாமல் சொன்னேன், ’நான் தமிழன்’ என்று. பின்னர், நான் எனது காரில் ஏறியதற்கு பின்னால், ஏன் அப்படி நான் கூறினேன் என்று யோசித்தேன். எனது ரத்தம் தமிழக மண்ணில் கலந்துள்ளதால் தமிழன் என்றேன்.
தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்துகொள்ளாமல் நம் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாது. தமிழர்களிடம் அன்புடன், பரிவுடன் பேசினால் அவர்கள் எதையும் தருவார்கள். 3,000 ஆண்டுகளாக தமிழ் மக்களின் மீது யாரும் எதனையும் திணிக்க முடியவில்லை. தமிழ் மக்களிடம் அன்போடும் அக்கறையோடும் பேசினால், அவர்களிடம் இருந்து எதையும் பெறலாம். பிரதமர் பொருள்புரியாமல் தமிழ்நாட்டை பற்றி பேசுகிறார்.
தமிழர்களின் குரலை புரிந்து கொள்ளாமல் நான் உங்களுக்காக பேசுகிறேன் என எப்படி சொல்வீர்கள்? நீட் விலக்கு வேண்டுமென தமிழ்நாடு தொடர்ந்து கோருவதைக் கேட்க மறுக்கிறீர்கள் என்றால் அவர்கள் மீது என்ன மதிப்பு வைத்துள்ளீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.