Aran Sei

அம்பானி, அதானிக்கான ‘ மத்திய அரசின் நாம் இருவர், நமக்கு இருவர் திட்டம் ’ – ராகுல் காந்தி

ந்தியாவை நான்கு பேர் தான் வழி நடத்தி வருகின்றனர் என்றும் அந்த நான்கு பேருக்காகவே விவசாயச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் மக்களவையில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 11) மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி பேசியுள்ளார். அதில், “நம்முடைய நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. ஆனால் விவசாயத்தை அழிக்கும் நோக்கிலேயே விவசாயச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. விவசாய சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனது உரையின் போது, போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்காக 2 நிமிடம் மௌனம் சாதிக்கும்படி ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்து, 2 நிமிடம் மௌனமாக நின்றார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவருடன் இணைந்தனர்.

இது குறித்து, ட்வீட் செய்துள்ள காங்கிரஸ், “தியாகிகளான விவசாயிகளுக்காக இரண்டு நிமிடம் மௌனம் கடைப்பிடிக்கச் சொன்ன போது, பாஜக எழுந்து நிற்க மறுத்து விட்டது. தேசம் இதை ஒரு போதும் மறக்காது” என்று கூறியுள்ளது.

“விவசாயிகள் தங்களது விவசாய விளை பொருட்களின் விலையை நிர்ணயிக்க, தொழிலதிபர் முன்னால் போய் நிற்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2-வது விவசாய சட்டம் விளை பொருட்கள் பதுக்கலை ஊக்குவிக்கும். விளை பொருட்கள் நிறுவனங்களின் குடோன்களில் அழுகும் நிலை தான் ஏற்படும்.” என்று ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

‘மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3-4 தொழிலதிபர்கள்தான் கடவுள்’ – ராகுல் காந்தி விமர்சனம்

மேலும், “இந்தியாவை நான்கு பேர் தான் வழி நடத்தி வருகின்றனர். அந்த நான்கு பேர் யார் என அனைவருக்கும் தெரியும். நாம் இருவர், நமக்கு இருவர் என்பது அரசின் குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரமாக முன்பு இருந்தது. தற்போது அது வேறு வடிவில் உருவெடுத்துள்ளது. இந்த அடிப்படையில் நாட்டை நான்கு பேர் ஆட்சி செய்கின்றனர். அந்த நான்கு பேருக்காகவே விவசாயச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் இதை குறிப்பிடும் போது, அவருடன் அமர்ந்திருந்த பிற காங்கிரஸ் உறுப்பினர்கள், “நாம் இருவர்” என்ற போது “மோடி, அமித் ஷா” என்றும், “நமக்கு இருவர்” என்று சொல்லும் போது “அம்பானி, அதானி” என்றும் குரல் எழுப்பினர். இதற்கு ஆளும் தரப்பில் இருந்த கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இவர்களுக்காகவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. விவசாயிகள்,  தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் கையிலிருந்த பணத்தை பிடுங்கி, நாம் இருவர், நமக்கு இருவர் பையில் போடுவதற்கு அது கொண்டு வரப்பட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், ஜிஎஸ்டி என்ற கப்பர் சிங் டேக்ஸ் மூலம் சிறு, குறு தொழில்களை அழித்து பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டது, அரசு என்று அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும், கொரோனா முழு அடைப்பின் போது, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தமது ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை கேட்ட போது அரசு செவி சாய்க்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

“நாட்டின் தானிய சேமிப்பு கொள்ளளவில் 40% ஒரே நபரின் வசம் உள்ளது” என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். “40 சதவீத சேமிப்பு கொள்ளளவு அம்பானி, அதானியிடம் உள்ளது என்பது தவறு, ராகுல் காந்தி இதை நிரூபிக்க வேண்டும்”  என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராகுல் காந்தியை இடைமறித்துக் கூறியது சிரிப்பலைகளை எழுப்பியது என்று டெலிகிராஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்