Aran Sei

‘மீன்வள சட்டமும் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தமும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்’- காங்கிரஸ் குற்றச்சாட்டு

மீனவர்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எடுத்துரைத்து, மீன்வர்களுக்கு வழங்கப்படும் மானியம் மற்றும் இந்திய கடல்சார் மீன்வள சட்டம் மீதான உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

நேற்று(டிசம்பர் 4), டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ள அகில இந்திய மீனவர் காங்கிரஸின் (ஏஐஎப்சி) தேசிய செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ளார்.

கடலோர ஒழுங்குமுறை மண்டலங்கள் (சிஆர்எஸ்), மீன்வர்களுக்கான மானியங்கள் மீதான உலக வர்த்தக அமைப்பின் புதிய கட்டுப்பாடு, இந்திய கடல்சார் மீன்வள சட்டம் மற்றும் நீலப் பொருளாதாரத் திட்டம் போன்ற மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவான அறிக்கையைத் தயாரித்து, தாக்கல் செய்யுமாறு அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.என்.பிரதாபனிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மீன்பிடிக்கான மானியங்களை நீக்கக் கோரும் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள டி.என்.பிரதாபன், “உலக வர்த்தக அமைப்பின் புதிய விதிமுறைகள் பாரம்பரிய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிடும். வளரும் நாடுகளின் மீன்பிடித் துறையின் பொருளாதாரத்தை அழிக்கும் இந்த ஒப்பந்தமானது, ஒன்றிய அமைச்சர்கள் குழுவிடம் கொண்டு செல்லப்பட்டு, இந்திய அரசின் கையெழுத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

“இந்நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய அளவிலான போராட்டங்களை அகில இந்திய மீனவர் காங்கிரஸ் நடத்தும். மீன்பிடித் துறையில் கார்ப்பரேட்களின் அஜெண்டாவை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இச்செயலானது கடல்சார் மீன்வளத்தை மட்டுமின்றி, உள்நாட்டு மீன்வளத்தையும் பாதிக்கும்” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்