Aran Sei

லக்கிம்பூர் கேரி வன்முறை – விவசாயிகளை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்திக்கு தடை விதித்த காவல்துறை

ங்களின் தைரியத்தை பார்த்து உத்தரபிரதேச நிர்வாகம் திகைத்துவிட்டது என்று லக்கிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (அக்டோபர் 4), தனது டிவிட்டர் பக்கத்தில்,  “பிரியங்கா, நீங்கள் பின்வாங்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் உங்கள் தைரியத்தை பார்த்துத் திகைத்துப்போய் விட்டார்கள். இந்த அகிம்சையின் நீதிக்கான போராட்டத்தில், நாங்கள் நாட்டின் உணவளிப்பவர்களை வெல்லச் செய்வோம்” என்று ராகுல் காந்தி ஹிந்தியில் டிவீட் செய்துள்ளார்.

அத்துடன் #NoFear என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.

நேற்று (அக்டோபர் 3), உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாய சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கியுள்ளனர்.

அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, பிரியங்கா காந்தி லக்கிம்பூர் கேரிக்கு செல்ல முயன்றபோது, உத்தரபிரதேச காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனால், காவல்துறையினருடன் பிரியங்கா காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இக்காணொளியை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

அக்காணொளியில், பிரியங்கா காந்தி, “வாரண்ட் அல்லது சட்டரீதியான உத்தரவை தாருங்கள். நீங்கள் என்னை காரில் ஏற்றி, என்னை வெளியேற்ற நினைத்தால், உங்கள்மீது கடத்தல் புகார் அளிப்பேன். இந்தப் புகார் காவல்துறைக்கு எதிராக இருக்காது, மாறாக உங்கள்மீது இருக்கும்.” என்று காவல்துறை அதிகாரியிடம் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தி சிதாபூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், மக்கள் அங்கு கூடுமாறும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்