Aran Sei

‘லட்சத்தீவு பூர்வகுடிகளின் பண்பாட்டிற்கும், மதத்துக்கும் எதிரான சட்டத்திருத்தங்களை நீக்குங்கள்’ – பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

மூகவிரோத செயற்பாடுகள் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்புச்சட்டம் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்ட திருத்தம், மதுபானங்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கம் ஆகியவை அனைத்தும் அத்தீவின் பூர்வகுடி சமூகத்தின் பண்பாட்டிற்கும், மதத்துக்கும் எதிரானதாக இருக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

லட்சத்தீவுகளின் புதிய  நிர்வாகி பிரபுல் கே பட்டேல் முன்மொழிந்துள்ள சட்ட திருத்தங்கள் அந்த மக்களுக்கு எதிராகவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும் இருக்கிறது என குற்றம்சாட்டும் தீவின் மக்கள். இதற்கு எதிராக போராட்டக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

மக்களுக்கு எதிராக எதேச்சதிகாரத்துடன் செயல்படும் நிர்வாகியை இந்திய ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் பிபி முகமது பைசல் கடிதம் எழுதியுள்ளார்.

லட்சத்தீவு மக்களுக்கு எதிராக செயல்படும் நிர்வாகியை திரும்ப பெற வேண்டும் – ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்

இந்நிலையில், நேற்று (மே 27), பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “லட்சத்தீவில் சீர்திருத்தம் என்ற பெயரில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வளர்ச்சிக் நோக்குடைய லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை முறையையும், ஆசைகளையும் மதிக்க வேண்டும். ஆனால், லட்சத்தீவு நி்ர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல் மீதும் தங்கள் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு ஆளாகுமோ என்று மக்கள் பயங்கொள்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

“மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்காமல் பிரபுல் படேல் தன்னிச்சையாக முடிவுகளையும் சீ்ர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளார். இந்தத் தன்னிச்சையான செயல்களுக்கு அம்மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவி்த்து வருகிறார்கள். மக்களின் வாழ்வாதாரமும் நிலையான வளர்ச்சியும் குறுகியகால வர்த்தக லாபத்துக்காக தியாகம் செய்யப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள பஞ்சாயத்து நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என்று பஞ்சாயத்து வரைவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.” என்று பிரபுல் கே பட்டேல் முன்மொழிந்துள்ள சட்ட திருத்தங்களை ராகுல் காந்தி பட்டியலிட்டுள்ளார்.

“சமூகவிரோத செயற்பாடுகள் ஒழுங்குமுறைச் சட்டம், லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்புச்சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவந்துள்ளார். மதுபானங்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளா். இவை அனைத்தும் அத்தீவின் பூர்வகுடி சமூகத்தின் பண்பாட்டிற்கும், மதத்துக்கும் எதிரானதாக இருக்கிறது. பேபூர் துறைமுகத்துடனான இணைப்பைத் துண்டித்து, கேரளாவுடனான நெருக்கமான, வரலாற்று பூர்வமான மற்றும் பண்பாட்டு ரீதியிலான உறவுகளை வெட்ட முயல்கிறார்.” என்று அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சட்ட சீர்திருத்தங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் லட்சத்தீவு மக்கள் – ஆதரவு தெரிவித்த திரைக் கலைஞர் பிரித்விராஜ்

மேலும், “மீனவர்கள் தங்கள் வலைகளையும், படகுகளையும் நிறுத்தும் இடங்கள் இடிக்கப்பட்டதுடன், பல்வேறு துறைகளிலும் பணியாற்றிய ஒப்பந்தப் பணியாளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி, அங்குத் தொற்று பரவ வழி செய்துள்ளார். மேலும், குற்றங்கள் மிகவும் குறைவாகவே நடைபெறும், அங்குச் சட்டம் ஒழுங்கைப் பராமரி்க்கிறேன் என்று கூறி கொடூரமான விதிகளைப் புகுத்தியுள்ளார். இவ்விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு, அச்சீர்த்திருத்தங்களை நீக்க ஆவணம் செய்ய வேண்டும்.” என்று பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக மலையாளம் திரைக்கலைஞர் பிருத்விராஜ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்