தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நாட்டை வழிநடத்த பக்குவம் போதாது என்று கூறியுள்ளார் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
லோக்மத் ஊடகத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் தர்தாவுக்கு ஷரத் பவார் பேட்டியளித்துள்ளார். அப்போது, ராகுல் காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொள்ள தேசம் தயாராக உள்ளதா எனும் கேள்விக்குப் பதிலளித்த ஷரத் பவார், “இது குறித்து எனக்குச் சில கேள்விகள் உள்ளன. அவருக்கு நாட்டை வழிநடத்த பக்குவம் போதாது என்று நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள ஷரத் பவார், ராகுல் காந்தியைக் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்துகளை மறுத்துள்ளார்.
ஒபாமா ‘எ ப்ரோமிஸ்ட் லந்து’ (A Promised Land) எனும் பெயரில் ஒரு சுயசரிதையை எழுதியுள்ளார். அதில், ராகுல் காந்தியைப் பற்றிக் கூறும் போது, “ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர். ஆசிரியரைக் கவர முயற்சிக்கும் ஒரு மாணவரைப் போன்றவர். ஆனால், ஆழமாக எந்தப் படத்திலும் தேர்ச்சி பெரும் ஆர்வம் இல்லாதவர்” என்று ஒபாமா கூறியுள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய ஷரத் பவார், அனைவரின் கருத்தையும் ஏற்றுக்கொள்வது அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
“நம் நாட்டின் தலைமைபற்றி நான் எதுவும் பேசலாம். ஆனால், வேறு நாட்டின் தலைமையைப் பற்றி நான் பேச மாட்டேன்” என அவர் கூறியுள்ளார்.
“நம் நாட்டின் தலைமைபற்றி நான் எதுவும் பேசலாம். ஆனால், வேறு நாட்டின் தலைமையைப் பற்றி நான் பேச மாட்டேன். ஒருவர் அந்த வரம்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒபாமா அந்த வரம்பை மீறிவிட்டார் என்று நான் நினைக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸின் எதிர்காலம் குறித்தும், ராகுல் காந்தி கட்சிக்கு ஒரு ‘தடையாக’ மாறிவருகிறாரா என்றும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, எந்தவொரு கட்சியின் தலைமையும், அதன் தலைவர்கள் கட்சிக்குள் எதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று ஷரத் பவார் பதிலளித்துள்ளார்.
“காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருடன் எனக்கு வேறுபாடுகள் இருந்தபோதிலும், இன்றும் கூட, காங்கிரஸ்காரர்களுக்கு காந்தி-நேரு குடும்பத்தின் மீது பாசம் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார். ஷரத் பவார் இரண்டு தசாப்தங்களுக்கு முன் காங்கிரஸ் தலைமையில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.