Aran Sei

‘ராகுல் காந்தி ஆசிரியரைக் கவர முயற்சிக்கும் ஒரு மாணவரைப் போன்றவர்’ – ஒபாமா

Image Credits: The Week

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘ஆசிரியரைக் கவர முயற்சிக்கும் ஒரு மாணவரைப் போன்றவர். ஆனால், ஆழமாக எந்தப் பாடத்திலும் தேர்ச்சி பெறும் ஆர்வம் இல்லாதவர்’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒபாமா ‘எ ப்ரோமிஸ்ட் லேண்ட்’ (A Promised Land) எனும் பெயரில் ஒரு சுயசரிதையை எழுதியுள்ளார். முதல் ஆப்பிரிக்க அமெரிக்க அதிபரின் இந்தப் புத்தகத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ மதிப்பாய்வு செய்துள்ளது. அந்தப் புத்தகத்தில், ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட உலகளவில் பல தலைவர்களைப் பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தது. அப்போது, ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஜோ பைடன் ஆகியோரைப் பற்றியும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image Credits: Time Magazine
PARIS, FRANCE – DECEMBER 02: Former US President Barack Obama delivers a speech during the 7th summit of “Les Napoleons” at Maison de la Radio on December 2, 2017 in Paris, France. Obama is the exceptional guest of “Les Napoleons” summit, a bi-annual symposium, created in 2015, dedicated to all the actors of innovation in communication and development around the world. (Photo by Chesnot/Getty Images)

ராகுல் காந்தியைப் பற்றிக் கூறும் போது, “ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர். ஆசிரியரைக் கவர முயற்சிக்கும் ஒரு மாணவரைப் போன்றவர். ஆனால், ஆழமாக எந்தப் பாடத்திலும் தேர்ச்சி பெறும் ஆர்வம் இல்லாதவர்” என்று ஒபாமா கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் தாயும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சார்லி கிறிஸ்ட் மற்றும் ரஹ்ம் இமானுவேல் போன்ற வசீகரிக்கும் ஆண்களைப் பற்றிதான் நாம் எப்போதும் கேள்விப்படுகிறோம். ஓரிரு பெண்களின் அழகைப் பற்றி அவ்வப்போது கேள்விப்படுவதும் உண்டு. சோனியா காந்தி அத்தகைய அழகு படைத்த ஒருவர்” என அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

ரஷியாவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் ஒருமைப்பாட்டைக் கொண்டவர்கள் என்று ஒபாமா கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சிகாகோ இயந்திரங்களை இயக்கும் கண்டிப்பான திறன்படைத்த முதலாளிகளை நினைவுபடுத்துகிறார் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

768 பக்கம் கொண்ட இந்தப் புத்தகம் நவம்பர் 17-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஒபாமாவின் பால்யம், அரசியல் வளர்ச்சி, வரலாற்றுச் சிறப்புமிக்க 2008-ம் ஆண்டு அவர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் மற்றும் அதிபராக இருந்த முதல் நான்கு ஆண்டுகள் பற்றிய பதிவுகள் உள்ளன.

ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், ராகுல் காந்தி காங்கிரஸின் துணைத் தலைவராக இருந்தார். 2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது ராகுல் அவரைச் சந்தித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்