Aran Sei

‘வருமானவரித் துறையை தன் தாளத்திற்கு நடனமாட வைக்கிறது மத்திய அரசு’ – ராகுல் காந்தி விமர்சனம்

ன் தாளத்திற்கு ஏற்ப வருமான வரித்துறையை மத்திய அரசு நடனமாட வைக்கிறது என்று அனுராக் காஷ்யப், தாப்சி பன்னு ஆகியோரின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (மார்ச் 3), அனுராக் கஷ்யப்பின் பாண்டம் பிலிம்ஸ், தயாரிப்பாளர் மது மாந்தேனா அலுவலகங்கள் உள்ளிட்ட, மும்பை மற்றும் புனேவில் உள்ள 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்றன.

தாப்சி பன்னு, அனுராக் கஷ்யப் ஆகிய இருவரும், பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து வந்த நிலையில், இந்தச் சோதனை நடைபெற்றது.

டாப்சி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை – பேராட்டங்களை ஆதரித்தது காரணமா?

இந்நிலையில், இதுகுறித்து இன்று (மார்ச் 4) தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “தன் தாளத்திற்கு ஏற்ப வருமான வரித்துறையை, மத்திய அரசு நடனமாட வைக்கிறது. நட்பு பாராட்டி வரும் ஊடகங்கள் மத்திய அரசிற்கு முன்பாக அடிபணிகின்றன.” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், மத்திய அரசின் அமைப்புகள், விவசாயிகளுக்கு ஆதரவளிப்பவர்களின் வீடுகளில் சோதனைகளை மேற்கொள்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ராகுல் பகிர்ந்துள்ள அந்த ட்வீட்டுடன், #ModiRaidsProFarmers என்ற ஹேஷ்டாக்கையும் இணைத்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்கள் தெரிவித்த கருத்திற்கு எதிராக, இந்திய பிரபலங்கள் கூட்டாக கருத்து தெரிவித்திருந்ததை தாப்சி பன்னு விமர்சித்திருந்தார்.

பாஜக அரசை எதிர்த்து கருத்து கூறியதால் குறிவைக்கப்படும் அனுராக் கஷ்யப், தாப்சி பன்னு – எதிர்க்கட்சிகள்

அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த தாப்சி, “ஒரு ட்வீட் உங்களின் ஒற்றுமையையும், ஒரு நகைச்சுவை உங்களின் நம்பிக்கையையும் அல்லது ஒரு நிகழ்ச்சி உங்களின் மத நம்பிக்கையையும் ஆட்டம் காணச் செய்கிறதென்றால்,  நீங்கள் உங்களுடைய நம்பிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டுமே அன்றி, மற்றவர்களுக்கு ‘பிரச்சார ஆசிரியர்’ ஆகக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இதே போல இயக்குனர் அனுராக் கஷ்யப், 2019 ஆம் ஆண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை, சுசாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்ரவர்த்தியின் கைது ஆகிய நிகழ்வுகளின்போது, அரசின் நடவடிக்கைகளை விமர்சித்திருந்ததோடு, இது தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் போதுமான அளவு குரல் எழுப்பவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்