Aran Sei

விவசாய சட்டங்களை திரும்ப பெற குடியரசு தலைவரிடம் காங்கிரஸ் மனு – தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி

credits : indian express

த்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த 28 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் தலைவர்கள் கட்சி தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அதன் பிறகு  ராஷ்ட்ரபதி பவனை நோக்கிபேரணி நடத்த முயன்றபோது அவர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் ? – ராகுல் காந்தி கேள்வி

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் செளத்ரி ஆகிய மூவர் மட்டும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க அனுமதியளிக்கப்பட்டது. இதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி 2 கோடி விவசாயிகள் கையெழுத்திட்ட கடிதத்தை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

‘ஆணவத்தை விட்டுவிட்டு விவசாயிகளுக்கு உரிமைகளை வழங்குங்கள்’ – ராகுல் காந்தி

குடியரசு தலைவரிடம் விவசாயச் சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளது என்றும் இதனால் விவசாயிகளும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ”விவசாயிகள் வலியில் இருக்கிறார்கள், பலர் மரணமடைந்தும் வருகிறார்கள், பிரதமர் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்” என ராகுல் காந்தி குடியரசு தலைவரிடம் கூறியுள்ளார்.

`தலித்துகளும் ஆதிவாசிகளும் படிக்கக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்’ – ராகுல் காந்தி

இந்தியாவின் குடியரசு தலைவரை சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுப்பது குறித்து பேசிய அவர் ”இது இந்தியாவின் சிந்தனை மீது நடத்தப்படும் தாக்குதல். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் அலுவலகங்களிலிருந்து வெளியேறுவதை அரசு தடுக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, அது கற்பனையில் தான் இருக்கிறது, நிஜத்தில் இல்லை” என்று கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ”இந்தியா தற்போது கற்பனை ஜனநாயகம்” என பதிவிட்டுள்ளார்.

விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடி அவருடைய முதலாளி நண்பர்ளுக்காக பணம் சம்பாதிக்கிறார். பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்கும் யாராக இருந்தாலும் தீவிரவாதி என அழைக்கப்படுவார்கள். அது விவசாயியாக இருந்தாலும் சரி, தொழிலாளியாக இருந்தாலும் சரி, மோகன் பகவத்தாக (ஆர்எஸ்எஸ் தலைவர்) இருந்தாலும் சரி” என்று ராகுல் கூறியுள்ளார்.

‘இந்தியாவிடம் ஃபேஸ்புக் பொய் சொல்கிறதா’ – ராகுல் காந்தி கேள்வி

நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல், ஒப்புதலும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட விவசாயச்  சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தச் சட்டத்தை பிரதமர் திரும்பப்பெறாவிட்டால் நாடு பல இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவும் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்