Aran Sei

ரஃபேல் ஒப்பந்தம் – ” இந்திய ஆவணங்களை ஃபிரெஞ்சு தரப்புக்குக் கொடுத்து பல கோடி சம்பாதித்த இடைத்தரகர்கள் “

image credit : indiatoday.in

ந்திய விமானப்படைக்கு ரஃபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் இடைத்தரகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தனர் என்றும் ரஃபேல் பேரத்தின் போது இந்திய அரசின் இரகசிய ஆவணங்கள் ஃபிரெஞ்சு தரப்பிடம் கொடுக்கப்பட்டன என்றும் பிரான்ஸ் நாட்டின் செய்தித் தளம் மீடியாபார்ட் வெளியிட்ட புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

தொழிலதிபர் சுஷேன் குப்தாவும் அவரது இடைத்தரகர்களும் ரஃபேல் விமானங்களை உற்பத்தி செய்யும் டசால்ட் நிறுவனத்திடமிருந்தும் அதன் துணை நிறுவனங்களிடமிருந்தும் பல லட்சம் யூரோ கமிஷனாக பெற்றனர் என்று மீடியாபார்ட் தளத்தின் புலனாய்வு அறிக்கையின் மூன்றாவது பகுதி தெரிவித்துள்ளது.

அதற்கு கைமாறாக, இந்திய பேச்சுவார்த்தை குழுவின் நிலைப்பாடுகளையும் பேச்சு வார்த்தையின் போது அது முன் வைக்கவிருந்த வாதங்களையும் கொண்ட இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கியமான ஆவணங்கள் உட்பட “இரகசிய தகவல்களை கசிய விட்டனர்”.

சுஷேன் குப்தா பாதுகாப்புத் துறை கான்டிராக்டர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும், 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா 126 போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது என்று தெரிந்த போது, டசால்ட் அவரை பணிக்கு அமர்த்தியது என்றும் இந்தியா டுடே கூறுகிறது.

சுஷேன் குப்தா டசால்ட் நிறுவனத்துக்கும் அதன் தொழில்துறை கூட்டு நிறுவனமான தேல்ஸ் நிறுவனத்துக்கும் இடைத்தரகராக செயல்பட்டதாக மீடியாபார்ட் தெரிவிக்கிறது. தேல்ஸ் என்பது டசால்ட் நிறுவனமும் பிரெஞ்சு அரசும் பங்குதாரர்களாக இருக்கும் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த பாதுகாப்பு-மின்னணு பொருட்கள் நிறுவனம் ஆகும்.

மீடியாபார்ட் செய்தித்தளம் வெளியிட்ட அறிக்கையின்படி தேல்ஸ் நிறுவனம், “மென்பொருள் ஆலோசனை சேவைகளுக்காக என, மிகைப்படுத்தப்பட்ட விற்பனை ஆவணங்களை பயன்படுத்தி, சுஷேன் குப்தாவுக்கு வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மூலமும் போலி நிறுவனங்கள் மூலமும் பல லட்சம் யூரோக்களை இரகசிய கமிஷனாக கொடுத்துள்ளது”.

சுஷேன் குப்தா இந்தியாவில் ஐடிஎஸ், மொரீஷியசில் இன்டர்ஸ்டெல்லர், மற்றும் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், லிஷ்டன்ஸ்டைன், ஸ்விட்சர்லாந்து போன்ற இடங்களில் பல கணக்குகள் என்ற ஒரு நிறுவனங்களின் வலைப்பின்னலை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மீடியா பார்ட் வெளியிட்ட டசால்ட் நிறுவனத்தின் ஆணவங்களின்படி, 2004-ம் ஆண்டில் டசால்ட் €20 லட்சத்துக்கான ஆர்டர்களை ஐடிஎஸ்-க்கு வழங்கியுள்ளது, மேலும் €46 லட்சத்துக்கு ஆர்டர்கள் கொடுக்க இருந்தது.

“2002-ம் ஆண்டுக்கும் 2005-ம் ஆண்டுக்கும் இடையே ஐடிஎஸ் நிறுவனம் இன்டர்ஸ்டெல்லார் நிறுவனத்துக்கு €9 லடசம் அனுப்பியுள்ளது” என்று மீடியாபார்ட் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த இன்னொரு நிறுவனமான இன்டர்டெவ் பணத்தை கைமாற்ற பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனம், “ஆசியாவில் டசால்ட்டின் பொறியியல் இணைப்பு நிறுவனம்” எனத் தொடங்கப்பட்டது, ஆனால் “குப்தா குடும்பத்தின் பினாமி ஒருவரால் நடத்தப்பட்டது, அவர் இப்போது தென் ஆப்பிரிக்காவில் தலை மறைவாக உள்ளார்” என்று மீடியாபார்ட் கூறியுள்ளது.

சுஷேன் குப்தாவின் ஒரு கணினி கோப்பை பெற்றுள்ள மீடியாபார்ட் அதில் டசால்ட் D என்ற ஆங்கில எழுத்தால் குறிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி 2004-2013 கால கட்டத்தில் டசால்ட் சிங்கப்பூரின் இன்டர்டெவ் நிறுவனத்துக்கு €1.46 கோடி அனுப்பியுள்ளது. இன்டர்டெவ் நிறுவனம் ஐடிஎஸ் நிறுவனத்துக்கு €26 லட்சத்தையும், மொரீஷியசின் இன்டர்ஸ்டெல்லர் நிறுவனத்துக்கு €1.1 கோடியையும் அனுப்பியுள்ளது.

“ஏப்ரல் 13, 2012 அன்று சுஷேன் குப்தாவின் சிங்கப்பூர் நிறுவனமான இன்டர்டெவ், டசால்ட் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கான, €40 லட்சம் மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்களை தயாரித்துள்ளது. அதன்படி, இந்தியாவின் ஆயுத சந்தை பற்றிய ஆய்வு அறிக்கைகளை வழங்குவதும் சாத்தியமான தொழில்துறை கூட்டு நிறுவனங்களை அடையாளம் காண்பதும் பணிகள் ஆகும்.” என்று மீடியாபார்ட் தெரிவித்துள்ளது.

சுஷேன் குப்தா “இந்திய பாதுகாப்புத் துறையிலிருந்து, இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்ட குறிப்புகள், பிரெஞ்சு தரப்பிடம் அவர்கள் முன் வைக்க தயாரித்திருந்த வாதங்கள், விலையை கணக்கிடுவதற்கான விபரமான குறிப்புகள், பயன்படுத்தப்பட்ட முறை ஆகியவற்றை பெற்றிருக்கிறார். வாங்கும் விலையை கணக்கிடுவதற்கான பேச்சுவார்த்தை குழுவின் ஒரு உறுப்பினர் தயாரித்திருந்த எக்செல் கோப்பையும் அவர் பெற்றிருக்கிறார்” என்று மீடியாபார்ட் குற்றம் சாட்டியுள்ளது.

ரஃபேலின் ஒரு முக்கிய போட்டியாளரான யூரோஃபைட்டர் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லிக்கு அனுப்பியிருந்த இரகசிய விற்பனை ஆவணத்தையும் சுஷேன் குப்தாவும் அவரது கூட்டாளிகளும் பெற்றுள்ளனர்.

இந்த இடைத்தரகர்கள் திரட்டிய இரகசிய தகவல்களை பயன்படுத்தி பிரெஞ்சு தரப்பு இந்திய பேச்சுவார்த்தை குழுவின் வாதங்களை எதிர் கொள்ள முடிந்திருக்கிறது.

ஜனவரி 20, 2016 அன்று உருவாக்கப்பட்ட ஒரு கணினி விரிதாளில் சுஷேன் குப்தா €787 கோடி வாங்கும் விலையை பரிந்துரைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அடுத்த சந்திப்பின் போது பிரெஞ்சு பேச்சு வார்த்தை குழு இதே தொகையை குறிப்பிட்டிருக்கிறது.

சில மாதங்களுக்குப் பிறகு, ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான இறுதி ஒப்பந்தம் €787 கோடி என்ற விலையிலேயே இறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது போடப்பட்ட அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தின் போதும் இதே போன்ற நிறுவனங்களின் வலைப்பின்னல் பயன்படுத்தப்பட்டது. அது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சுஷேன் குப்தா பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் சுஷேன் குப்தாவும் கிறிஸ்டியன் மைக்கேல் என்பவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இதைப் பயன்படுத்தி, இவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சிக்கும் சோனியா காந்திக்கும் முகவர்கள் என்று பாஜகவால் சித்தரிக்கப்பட்டனர். சுஷேன் குப்தாவும் கிறிஸ்டியன் மைக்கேலும் ஆயுத பேர தரகர்கள் என்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்க இவர்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் இப்போது தெரிகிறது.

இந்தச் செய்திகள் “உருத்திரிக்கப்பட்டவை, தவறானவை, மற்றும் அடிப்படையற்றவை” என்று சுஷேன் குப்தா தனது வழக்கறிஞர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

“36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான இந்திய – பிரான்ஸ் ஒப்பந்தத்துக்கும் சுஷேன் குப்தாவுக்கோ அவரது நிறுவனங்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை” என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

“டசால்ட் நிறுவனத்துக்கோ அல்லது வேறு எந்த நிறுவனத்துக்கோ ஆயுத ஒப்பந்தங்கள் தொடர்பாக சுஷேன் குப்தா ஒரு போதும் வர்த்தக இடைத்தரகராக இருந்ததே இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது எந்த விதிமீறல்களும் நடந்ததாக தகவல் இல்லை என்று டசால்ட் நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.

“இந்தியா 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்திய அரசுக்கும் பிரான்ஸ் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தமும் அதனோடு சேர்ந்த ஈடு செய்யும் ஒப்பந்தமும் பிரெஞ்சு ஊழல் எதிர்ப்பு சட்டங்களின் வரைமுறைகளுக்குட்பட்டே இருந்தன. இந்த ஒப்பந்தங்கள் முழு வெளிப்படைத்தன்மையுடன் பல்வேறு அரசாங்க மற்றும் தொழில்துறை பங்கேற்பாளர்களிடையே நிறைவேற்றப்பட்டன” என்று டசால்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

“டசால்ட் நிறுவனமும் ரிலையன்ஸ் குழுமமும் 2017-ம் ஆண்டில் டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் நாக்பூரில் ஒரு தொழிற்சாலையை அமைத்துள்ளன. அங்கு 2018 முதல் பல ஃபால்கன் விமானத்தின் பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்