Aran Sei

‘தமிழகத்தை பிரிக்க வேண்டுமென்று இராமதாஸ் ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தையே கூறுகிறார்’ – தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்

மிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கலாம் என்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாசின் கருத்துத் தமிழினத்திற்கும், தமிழர் உரிமைக்கும் எதிரானது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் கோரிக்கையாகவும், அண்ணல் காந்தியடிகள் தலைமையிலான காங்கிரசுக் கட்சியின் கோரிக்கையாகவும் இருந்தது.

’வன்னியர் இடஒதுக்கீடு கிடைக்கும் வரை கூட்டணி பற்றி பேச்சுக்கே இடமில்லை’ – ராமதாஸ் உறுதி

மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப் படும் என்று இரண்டாம் உலகப்போர் காலத்திலேயே காங்கிரசுத் தலைமை உறுதி கூறியது. ஆயினும், சுதந்திரத்திற்குப் பின்னால் அந்த வாக்குறுதியை மீறியதால், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு தேசிய இனப் பகுதிகளில் கடும் போராட்டங்கள் எழுந்தன. அவற்றின் விளைவாக மாநிலச் சீரமைப்புக் குழு உருவாக்கப்பட்டது.

அதனடிப்படையிலேயே 1956 நவம்பர் 1 அன்று மொழிவழி தேசிய இன மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டது; அவ்வாறே பல்வேறு மாநிலங்களும் உருவாக்கப்பட்டன.

அன்புமணி ராமதாசிடம் கேள்வியெழுப்பிய பத்திரிகையாளரை மிரட்டிய பாமக தொண்டர்கள்

மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்படும் போதே ஆர்.எஸ்.எஸ்.சும், இந்து மகா சபையும் மொழிவழி மாநிலங்கள் கூடாது, இந்தியா முழுவதையும் “ஜன்பத்” என்ற பெயரால் பல்வேறு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியது. இந்நிலையில் ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தைத்தான் தன்னுடைய சொற்களில் இராமதாசு கூறுகிறார் என்று கி.வெங்கட்ராமன் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

அவ்வாறு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது தீர்க்கப்படாத மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்தே பல்வேறு மொழிவழி தேசிய இனங்களும், இனக்குழு மக்களும் தங்களுடைய தாயகம் தனி மாநிலமாக உருவாக்கப்பட வேண்டுமென தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

சென்னை மக்களுக்கு ஆபத்து – ராமதாஸ் எச்சரிக்கை

உத்திரப்பிரதேசத்தில் ஆவத்பிரதேசம், புந்தல்கண்ட் போன்ற மாநிலக் கோரிக்கைகள் இருப்பதை கூறி தமிழகத்தை பிரிக்க வேண்டுமென ராமதாஸ் கோரிக்கையை முன்வைக்கிறார் . ஆனால் அவத்தி மொழியை இந்தி மொழி கபளீகரம் செய்து, உத்திரப்பிரதேசத்தில் இணைத்தபோது அவத்தி மொழி பேசும் ஏறக்குறைய நான்கரை கோடி மக்கள் தங்களுடைய மொழித் தாயகம் “ஆவத்பிரதேசம்” எனத் தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என குரலெழுப்பினர்.

மருத்துவர் இராமதாசு கூறும் ஜார்கண்ட், உத்தரகண்ட், சத்தீசுகார் ஆகிய மாநில உருவாக்கங்களும் தனித்த பண்பாடு , வரலாறு கொண்ட இனக்குழு மக்களின் தாயக ஏற்பாகும். அதுபோல், தெலங்கானாவும் தனித்த மொழி உச்சரிப்பும், பண்பாடும், வரலாறும் கொண்ட அம்மக்களின் தொடர் போராட்டத்தால் உருவானதாகும்.

இவ்வாறு மருத்துவர் இராமதாசு அவர்கள் எடுத்துக்காட்டியுள்ள அனைத்து வரலாற்று நிகழ்வுகளும் மொழிவழி தேசிய இனங்கள், இனக்குழுக்கள் தாயகம் அமைப்பதற்கானதே தவிர தாயகத்தைக் கூறுபோடுவதற்கான முன்முடிவுகள் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

“இடஒதுக்கீட்டுக்காக வரலாறு காணாத போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு

அவர் கூறுவதுபோல் தமிழர் தாயகமான தமிழ்நாட்டைக் மூன்றாகப் பிரித்துத் தனித்தனி மாநிலம் ஆக்கினால், வரலாற்றவர்களாக, தாயகம் அற்றவர்களாகத் தமிழர்கள் மாற்றப்படுவார்கள். அவ்வாறு கூறுபோடப்படும் மூன்று மாநிலங்களிலுமே மிக விரைவில் தமிழர்கள் சிறுபான்மையினராக மாறிப் போவார்கள். இந்திக்காரர்களும், மார்வாடிகளும், பிற மாநிலத்தவரும் ஆதிக்கம் செய்யும் ஆட்சிப்பகுதியில் உரிமையற்ற கொத்தடிமைகளாக அனைத்துச் சாதி தமிழர்களும் ஒடுக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மதத்தைக் காட்டி காஷ்மீரிகளின் வரலாற்றுத் தாயகமான ஜம்மு காஷ்மீரை இரண்டு ஆட்சிப் பகுதியாக மோடி அரசு சிதைத்தது போன்று ராமதாஸ் சாதியை முதன்மைக் காரணியாகக் கொண்டு வளர்ச்சி என்ற போர்வையில் தமிழகத்தை பிரிக்க முயல்கிறார்.

ரயில் மறிப்பு, கற்கள் வீச்சு – தொடங்கியது பாமக இடஒதுக்கீடு போராட்டம்

மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் என்ற நிலையில் இருக்கும்வரை மட்டுமே அந்தந்த மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தவாவது முடியும். அதுவும் இல்லையென்றால், பா.ச.க.வின் ஒற்றை இந்தியா கொள்கையில் சிக்கி தமிழகம் சிதைந்து போகும் என்றும் கி.வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டுமென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் இராமதாசின் கோரிக்கை தமிழினப் பகைக் கருத்து என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார்.

SOURCE; தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்