Aran Sei

ஆர்.ஏ. புரம் வீடுகள் இடிப்பு: சென்னைக்குள் மறுகுடியமர்வு செய்ய தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் – நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை ஆர்.ஏ புரம் வீடுகளை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தியுள்ளது. பின்னர், தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக செய்தியில், சென்னை ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் மக்களின் 259 கல் வீடுகளை தற்போது தமிழக அரசு இடித்துவருகிறது.  இதனை அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்த்துவந்த சூழலில், கண்ணையன் (வயது 60) என்ற முதியவர் வீடுகள் இடிப்பதைக் கண்டித்து, ‘இந்த ஊமை ஜனங்களை காப்பாத்துங்க’ என்று முழங்கிக்கொண்டு தீக்குளித்துள்ளார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

பக்கிங்காம் கால்வாயில் இருந்து வெகுதூரம் உள்ள இந்த கல் வீடுகளை அகற்றி விலை உயர்ந்த நிலத்தை கைப்பற்றும் முயற்சியில் தொழிலதிபர் ஒருவர் நீதிமன்ற வழக்கு மூலமும் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் செயல்பட்டுவருவதாக அம்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுவரை வீடுகள் இழந்த மக்களுக்கு சென்னை நகரத்திற்கு வெளியே படப்பை நாவலூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுவீடுகள் கொடுப்பதை மக்கள் ஏற்கவில்லை. பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் இது போன்று காவல்துறை வன்முறையின் மூலம் வீடுகளை இடித்து, சென்னை நகரத்திற்கு வெளியே துரத்தியடிப்பதைக் கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணி அளவில் கிரீன்வேஸ் சாலை இரயில் நிலையம் எதிரில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்களும் பல்வேறு ஜனநாயக இயக்கங்களும் பங்கேற்று கண்டனம் தெரிவித்தனர். தோழர்கள் சிறிராம் (சோசலிச தொழிலாளர் மையம்), செபாஸ்டியன் (குடிசை மாற்று வாரியக் குடியிருப்போர் நலக்கமிட்டி), உமாபதி (திராவிடர் விடுதலை கழகம்), புவன் (மக்கள் அதிகாரம்), மோகன் (அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி), மகிழன் (தமிழத்தேசிய விடுதலை இயக்கம்), R.கீதா (அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு), சாகிர் (பாப்புலர் ப்ரண்ட்), காசிநாதன் (ராணி அண்ணா நகர் குடியிருப்போர் சங்கம்) மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டனர்.

கடந்த ஓராண்டில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பிரிட்டிஷ் இந்தியா கால வரைபடங்களை வைத்துக்கொண்டு ’நீர்நிலை’ என்பதற்கான சுவடுகளே இல்லாத இடங்களைக்கூட ’நீர்நிலை ஆக்கிரமிப்பு’ என்று அறிவித்து மக்களின் வீடுகளை இடித்து சென்னைக்கு வெளியெ விரட்டியடிக்கும் கொடுமை நடந்துவருகிறது. இதில் பல தொண்டு நிறுவனங்கள் தொடுத்த வழக்குகளில் நீதிமன்றம் வழங்கிய இயந்திரகதியிலான ஆணைகளின் பெயரால் நடந்துவருகின்றன.

சென்னை ஆர்.ஏபுரத்தில் வீடுகள் இடிப்பு: ‘இந்த ஊமை ஜனங்களைக் காப்பாத்து’ எனக்கூறி தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு

முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூர் அவ்வை நகரில் ’நீர்நிலை ஆக்கிரமிப்பு’ என்று சொல்லி 58 வீடுகள் இடிக்கப்பட்டன. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெத்தேல் நகரில் சுமார் 4000 வீடுகளை இடிப்பதற்கு புல்டோசருடன் அரசு காத்து கிடக்கிறது. குரோம்பேட்டை சிட்லபாக்கம் ஏரியின் அருகில் உள்ள பெரியார் தெருவில் உள்ள வீடுகளில் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்பில் தமிழக அரசு 100 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கு நினைவுதெரிந்த அளவில் தண்ணீரையே கண்டிராத பகுதிகளைக்கூட ’நீர்நிலை’ என்று வரையறுக்கிறது. அப்படி பார்த்தால் சென்னை நகரத்தில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை நீர்நிலைகள் என்று வகைப்படுத்த வேண்டிவரும். எனவே, சென்னை நகரத்து நிலங்களைப் பழைய வகைப்படுத்தலின்படி பார்த்து வீடுகளை இடிப்பது சென்னை நகரப் பூர்வக்குடி உழைக்கும் மக்களின் மீது நிகழ்த்தப்படும் செயற்கை பேரிடராக மாறிவிடும்.

ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் நிலத்தின் வகையினத்தை மாற்றி அவர்களின் வாழவிட உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு கொள்கை மாற்றம் செய்ய வேண்டும். வீடுகள் இடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தலைமுறை தலைமுறையாக சென்னை நகரத்தில் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்விட உரிமையை உறுதிசெய்ய அரசாணை (G.O. (MS) No. 267/567) அடிப்படையில் ‘ஆட்சேபனையற்ற’ புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீடுகள் இடிப்பு: ‘இந்த ஊமை ஜனங்களைக் காப்பாத்து’ எனக்கூறி முதியவர் தீக்குளிப்பு: நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு கண்டனம்

கடந்த ஆட்சிகள் போலவே பெரும்பாக்கம், செமம்ஞ்சேரி, படப்பை நாவலூர் என சென்னை நகரத்திற்கு வெளியே மக்களை விரட்டியடிக்கும் கொடுமை இப்போதும் தொடர்கிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சென்னை நகரத்திற்குள்ளேயே மாற்றுக் குடியிருப்புகளை வழங்குவது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு  வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Surya Siva திமுகவுக்கு உழைச்ச லட்சணத்த நா சொல்றேன் | Munna Ibrahim

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்