Aran Sei

கொரோனா முதல் அலையில் நடவடிக்கை எடுக்காத அரசே இந்நிலைக்கு காரணம் – சு.வெங்கடேசன்

துரை மாவட்டத்தில் ஆக்சிஜன் கொள்கலன் அளவினை சுமார் நான்கு மடங்கு நாங்கள் உயர்த்தியதற்கு, நாங்கள் யாரிடமும் பிச்சையெடுக்கவில்லை, திருடவில்லை, வேறெதுவும் செய்யவில்லை என்றும் மக்களுக்கான தேவையைக் கணக்கிற்கொண்டு திட்டமிட்டுப் பணியாற்றியவர்களுக்குக் கம்பீரத்தோடு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அப்படி நன்றிசொல்ல உங்களுக்கு யாராவது இருக்கிறார்களா என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஏப்ரல் 25), அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் 6000 லிட்டர் திரவ ஆக்சிஜனுக்கான கொள்கலன் மட்டுமே இருந்தது. அதன் மூலம் 400 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதனை உடனடியாக அதிகப்படுத்துவது முதற்பணியாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினோம். சிறப்பு அதிகாரி டாக்டர் சந்திரமோகனும் அன்றைய மதுரை ஆட்சியர் டாக்டர் வினய்யும் அதன் முக்கியத்துவத்தை முழுவதுமாக உணர்ந்து உடனடியாகச் செயலில் இறங்கினர். சென்னையிலிருந்து வாங்கவேண்டிய அனுமதியைப்பெற எல்லோரும் அவரவர்கள் பாணியில் முயற்சித்தோம். வேலைகள் படுவேகமாக நடந்தன.” என்று நினைவூட்டியுள்ளார்.

பதஞ்சலி மருந்து குறித்து ஹர்ஷவர்தன் விளக்கமளிக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் சங்கம்

“அதன் விளைவாக கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மதுரை ராஜாஜி மருத்துவமனையிலிருந்த 6000 லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலன் 20000 ஆயிரம் லிட்டர் கொள்கலனாக மாற்றப்பட்டது. 400 படுக்கைகளுக்கு மட்டும் கொடுப்பட்டிருந்த இணைப்பு கூடுதலாக 700 படுக்கைகளுக்குத் தரப்பட்டு மொத்தம் 1100 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு தரப்பட்டது. அதுவரை தோப்பூர் அரசுமருத்துவமனைக்கு சிலிண்டர் மூலம் 30 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் தரும் வசதி இருந்தது. ஆனால் அதன் பிறகு புதிய கொள்கலன் அங்கு நிறுவப்பட்டு 130 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வசதியாக அது மாற்றப்பட்டது.” என்று சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்தச் செயல்கள் எல்லாம் எளிதில் நடந்து விடவில்லை. அப்பொழுது முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. அந்த நேரத்தில் பெங்களூர், பாண்டிச்சேரி, ஆகிய இடங்களிலிருந்து பொருள்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பணியாளர்களையும் பேசி வரவைத்து வேலையை விரைவுபடுத்துவதில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்ட டாக்டர் சந்திரமோகன் அவர்களுக்கும் அன்றைய ஆட்சியர் டாக்டர் வினய் அவர்களுக்கும் இந்த நேரத்தில் மதுரை மக்களின் சார்பில் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று அவர் தனது அறிக்கை குறிப்பிட்டுள்ளார்.

கடைசி தீர்வு ஊரடங்கு என்று அறிவுரை கூறும் பிரதமரே; முதல் தீர்வான தடுப்பூசியை முதலில் முறையாகச் செயல்படுத்துங்கள்- சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

இப்பொழுது நாடே ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும்போது எங்களால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதற்குக் காரணம், முதல் அலையின் போது எடுத்துக்கொண்ட சிறப்பு நடவடிக்கையும் அதற்காக உழைத்த மனிதர்களுந்தான் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

மேலும்,இப்பணிகளுக்கு பக்கபலமாக இருந்த மதுரை மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்குமணி, தோப்பூர் மருத்துவமனையின் பொறுப்பாளர் டாக்டர் காந்திமதிநாதன் ஆகியோருக்கும் உடனிருந்த அனைவருக்கும் எனது நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

“இந்த நேரத்தில் இந்திய ஒன்றிய அரசின் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு நான் எழுப்பும் கேள்வி, கடந்த ஆண்டு வந்த கரோனாவின் முதல் அலையைத் தொடர்ந்து, 30 லட்சம் மக்கள்தொகை இருக்கும் மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் கொள்கலன் அளவினை சுமார் நான்கு மடங்கு உயர்த்தியிருக்கிறோம். நாங்கள் யாரிடமும் பிச்சையெடுக்கவில்லை, திருடவில்லை, வேறெதுவும் செய்யவில்லை. மக்களுக்கான தேவையைக் கணக்கிற்கொண்டு திட்டமிட்டுப் பணியாற்றினோம். எனவே, மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அதற்காகப் பணியாற்றியவர்களுக்குக் கம்பீரத்தோடு நான் நன்றிசொல்லிக்கொள்கிறேன்.” என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

அப்படி நன்றிசொல்ல உங்களுக்கு யாராவது இருக்கிறார்களா அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்களே என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்