2019-20க்கான கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தரவரிசை அட்டவணையில், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக செயலாற்றியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தர அட்டவணையானது, பள்ளி கல்வித்துறையின் கற்றல் முடிவுகள், அணுகல் மற்றும் பகிர்வு,அடிப்படை கட்டமைப்பு மற்றும் வசதிகள்,நிர்வாகம் மற்றும் மேலாண்மை செயல்முறைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் தரவரிசை அட்டவணையாகும்.
இந்நிலையில், இந்த தரவரிசை அட்டவணையில் குஜராத் இரண்டாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்திற்கு சென்றுள்ளதாகவும், இதேபோன்று சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சென்றாண்டு 1000 மதிப்பெண்ணுக்கு 769 மதிப்பெண் பெற்றிருந்த பஞ்சாப் மாநிலம் இந்த ஆண்டு அதிலிருந்து உயர்ந்து 929 மதிப்பெண் பெற்றுள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னிலை வகித்த சண்டிகர் யூனியன் பிரதேசத்தையும் பஞ்சாப் மாநிலம் பின்னுக்கு தள்ளியுள்ளதாகவும், சண்டிகர் தற்போது 912 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.
இதேபோன்று, தமிழ் நாட்டின் பள்ளிக்கல்வியில் எடுக்கப்பட்ட நிர்வாகம் மற்றும் மேலாண்மை செயல்முறைகள், கட்டமைப்பு, வசதிகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக 906 மதிப்பெண்கள் பெற்று கேரள மாநிலத்தை பின்னுக்கு தள்ளியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் , சென்ற ஆண்டு 2 ஆம் இடம் வகித்த பஞ்சாப், பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் இடைநிற்றலை தடுத்தல் ஆகியவற்றில் செயலாற்ற தவறியதால் இந்த ஆண்டு எட்டாம் இடத்தைப் பெற்று மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தி இந்து செய்தியில் கூறியுள்ளது.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனை கூட்டம் – புறக்கணித்த தமிழக அரசு
இதே போன்று , மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஒட்டுமொத்த நிர்வாக செயல்பாடுகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாது, முதன்முறையாக இந்த பட்டியலில் இணைக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசம் 545 மதிப்பெண்கள் பெற்று கடைசி இடத்தில் உள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.
இந்த தரவரிசை அட்டவணையின் படி கேரளா 901 மதிப்பெண்களும், மகாராஷ்டிரா 869 மதிப்பெண்களும், கர்நாடகா 813 மதிப்பெண்களும், ஆந்திரா 811 மதிப்பெண்களும், தெலுங்கானா 747 மதிப்பெண்களும் பெற்றுள்ளதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.