பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கங்கள் ஒரு கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 32 விவசாயிகள் சங்கங்கள் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக தொடர்ந்து கூட்டங்களை நடத்தி வருகின்றன. சொந்தமாக அரசியல் கட்சியை உருவாக்குவதா அல்லது வேறு ஏதேனும் கட்சிக்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.
இது குறித்து பேசியுள்ள மூத்த விவசாயிகள் சங்கத் தலைவர் ஒருவர், “32 விவசாயிகள் சங்கங்களில், 23-24 சங்கங்கள் சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க வேண்டும் என்று கருதுகின்றன. சுமார் ஏழு சங்கங்கள் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். சில சங்கங்கள் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அச்சங்கங்கள் இன்று(டிசம்பர் 26) விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவிடம் தங்களின் முடிவை தெரிவிக்க உள்ளன” என்று கூறியுள்ளார்.
பாரதிய கிசான் யூனியனின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு – புதிய கட்சியைத் தொடங்கினர் ஹரியானா விவசாயிகள்
இன்று ஒட்டு மொத்த சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் முடிவும் அறிவிக்கப்படும் என்றும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட விரும்பும் விவசாயிகள் சங்கங்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அக்கட்சிக்கு சுமார் 13 விவசாயிகள் சங்கங்கள் ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, பேசியுள்ள மற்றொரு விவசாயிகள் சங்கத் தலைவர் ஒருவர், “டெல்லியின் எல்லையில் ஓராண்டாக நீடித்த போராட்டத்தின் போது, ஆம் ஆத்மி அரசு விவசாயிகளை ஆதரித்தது. அதன் பொருட்டு, விவசாயிகள் சங்கங்கள் அக்கட்சிக்கு அதரவு தர முன்வந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கங்கள் அரசியலில் இறங்குவது குறித்து உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில், அண்மையில் ஹரியானா பாரதிய கிசான் யூனியனின் தலைவர் குர்னாம் சிங் சாருனி, சன்யுக்த் சங்கர்ஷ் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.