Aran Sei

விவசாய சட்டத்திற்கு எதிராக மார்ச் 26-ல் பாரத் பந்த் – ஒருங்கிணையும் விவசாய சங்கங்கள்

மார்ச் 26 ஆம் தேதி நடக்கவுள்ள நாடு தழுவிய பாரத் பந்த்திற்கு ஆதரவு அளிக்கிறோம் என்று கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி பஞ்சாப்  (கேஎம்எஸ்சிபி) அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படும் என்றும், சாலை மற்றும் ரயில் போக்குவரத்துகள் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

நேற்று (மார்ச் 14), பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூர் லோதியில் விவசாய சட்டங்களுக்கு எதிரான பேரணியில் கேஎம்எஸ்சிபி மாநிலத் தலைவர் சத்னம் சிங் பன்னு பங்கேற்று உரையாற்றும்போது இதை தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற இப்பேரணியில், சிங்கு மற்றும்  டெல்லியின் பிற எல்லைகளில் நடந்த போராட்டங்களின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாரத் பந்த், ஹோலி பண்டிகையில் விவசாய சட்ட நகல் எரிப்பு, பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம்’

விவசாய போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு, பின்னர்  விடுவிக்கப்பட்ட நோதீப் கவுர் கூறும்போது,  “விவசாயிகளின் உண்மையான கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொள்ளும் வரை நாங்கள் ஓய மாட்டோம். உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்களுக்கு தலா ரூ .10 லட்சம் உதவி வழங்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடந்து வரும் போராட்டங்களில் ஒரு பகுதியாக, மார்ச் 26 ஆம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த்திற்கு சம்யுக்த் கிசான் போர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்