Aran Sei

ஹரியானா விவசாயிகள் மீதான காவல்துறையின் தாக்குதல்: கண்டித்து போராட்டத்தில் களமிறங்கிய பஞ்சாப் விவசாயிகள்

ரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து, பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியானாவின் பாஜக தலைமையிலான அரசின் உருவ பொம்மைகளையும் எரித்துள்ளதோடு, மாநிலத்தின் முக்கிய சாலைகளையும் முடக்கியுள்ளனர். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 28), ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் ஓ.பி.தங்கர் ஆகியோர் கலந்து கொண்ட பாஜக கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டம் நடைபெற்ற கர்னல் நகர் நோக்கிச் சென்ற அம்மாநில விவசாயிகளை தடியடி நடத்தி கலைத்ததன் காரணமாக 10 பேர் காயமடைந்தனர்.

பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கங்களில் ஒன்றான கிசான் சங்கர்ஷ் மஸ்தூர் கமிட்டி பொதுச்செயலாளர் சர்வான் சிங் பந்தர், ஹரியானா காவல்துறையினரால் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதைக் கண்டித்து, பஞ்சாப் மாநில அமிர்தசரஸில் நடந்த போராட்டத்தின்போது பேசிய சர்வான் சிங் பந்தர், “​​விவசாயிகள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்தான் பொறுப்பு. அவர் அப்பதவியில் தொடர தார்மீக அடிப்படையில் இனி உரிமை இல்லை என்பதால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

இத்தடியடியை கண்டித்து, பாரதிய கிசான் யூனியன் விவசாயிகள் சங்கமானது, பஞ்சாப்பில் 56 இடங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, “போராடும் விவசாயிகள் மீதான இந்த மோசமான தாக்குதல், ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல். இந்த உரிமைகள் சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்ற தியாகம் செய்து பெற்றது. இத்தாக்குதல் அரசியலமைப்பின் உணர்வையே தாக்குவதோடு, இந்தியா ஜனநாயகத்தின் முதுகெலும்பை உடைக்கிறது.” என்று விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவுத்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்