பஞ்சாப் மாநிலம் அபோதகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான அருண் நராங் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவசாய தலைவர்கள்மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.
முக்சார் மாவட்டம் மாலூட் என்ற இடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிற்கு அருண் நராங் வருகை புரிந்தபோது, விவசாய சங்கப் பிரதிநிதிகள் அவரைத் தாக்கினர். மேலும், இந்தத் தாக்குதலில் அவர் அணிந்திருந்த ஆடைகள் கிழிந்ததோடு அவர்மீது கருப்பு மை ஊற்றப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத 200 பேர் தவிர்த்து, பாரதிய கிசான் சங்கம் (சித்துபூர்) உறுப்பினர் நிர்மல் சிங் ஜசெனா, பாரதி கிசான் சங்கம் சிதுப்பூர் மாவட்ட தலைவர் சுக்தேவ் சிங் புராபுஜார் உட்பட ஏழு பேர்மீது கொலை முயற்சி மற்றும் கலவரத்தில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களின் மீது முதல் தகவல் அறிக்கையைப் பஞ்சாப் காவல்துறை பதிவு செய்துள்ளது.
என்.ஆர்.சியில் விடுபட்டவர்களுக்கு ’நிராகரிப்பு சீட்டுகள்’– அசாம் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை
பாஜக எம்.எல்.ஏ தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் ஒருங்கிணைப்பாளர் தர்ஷன் பால், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் தொடர்ந்து விவசாயிகளைத் தூண்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
“போராடும் விவசாயிகளைப் பா.ஜ.க தலைவர்கள் தூண்டிவிடக்கூடிய ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகள் எனக்குப் பலரும் அனுப்பியிருந்தனர். அமைதியான முறையில் பாரத் பந்த் நடத்த ஏற்பாடு செய்தோம். விவசாயிகளைத் தூண்டிவிடவேண்டாம் என பா.ஜ.க.வை எச்சரிக்கிறோம். தற்போதைய சம்பவத்தில், எதிர்ப்பாளர்களில் சிலர் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருந்தனர். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க விவசாயிகளைத் தொந்தரவு செய்து வருகிறது. ஜனவரி 22க்குப் பிறகு, அரசு எந்தப் பேச்சுவார்த்தைக்கும் முன்வரவில்லை” என்று பாரதிய கிசான் சங்கத் (டகௌண்டா) தலைவர் ஜக்மோகன் சிங் பாட்டியாலா கூறியுள்ளார்.
நராங்க் மீதான தாக்குதலைக் கண்டித்து, சண்டிகரில் முதல்வர் அமரீந்தர் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வெளியே ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) பஞ்சாப் பா.ஜ.க தலைவர்கள் பலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பத்னோரே, நராங் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசிடம் அறிக்கை கோரியுள்ளார்.
நராங்க் மீதான தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள அமரீந்தர் சிங், மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.