Aran Sei

பாகிஸ்தானில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது – பஞ்சாப் காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொரோனா இரண்டாவது அலையைச் சமாளிக்கும் விதமாக, பாகிஸ்தானில் ஆக்சிஜன் இறக்குமதி செய்ய முடிவு செய்திருக்கும் பஞ்சாப் அரசின் திட்டத்திற்கு, மத்திய அரசு ஒத்துழைக்க மறுப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆலைகளில் போதிய ஆக்சிஜன் இருக்கிறது, அதனை இறக்குமதி செய்யப் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் முடிவு செய்திருக்கும் நிலையில், இடையில் மத்திய அரசு வருகிறது என அவர் கூறியுள்ளார்.

நேற்று, கொரோனா பரவல் நிலை மற்றும் மாநில அரசு சந்திக்கும் பிரச்னைகள்குறித்து விவாதிக்க நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற ஜாகர், மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஒரு உயிரிழப்பு ஏற்பட்டாலும், அதற்கு மத்திய அரசே பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ளார்.

‘இந்தியாவிற்கு வெண்டிலேட்டர்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள், பிபிஇ கவச உடை வழங்க பாகிஸ்தான் முடிவு’ – தொற்றுக்காலத்தில் துணை நிற்பதாக உறுதி

”ஆக்சிஜன் இறக்குமதி விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டோம். எங்களுக்கு நல்ல பதில் இன்னும் கிடைக்கவில்லை என முதலமைச்சர் எங்களிடம் தெரிவித்தார். எங்களுக்கு ஆக்சிஜன் கிடைத்தால், அதனை இறக்குமதி செய்வதில் ஏற்படும் நிதிச்சுமையை நாங்களே ஏற்க தயார். மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்கு இது அவசர தேவை” என ஜாகர் குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபிற்கு ஆக்சிஜன் இறக்குமதி செய்வதற்கு போதுமான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குர்ஜீத் சிங் அவுஜ்லா கோரிக்கை  வைத்துள்ளார்.

மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பாகிஸ்தான் மோதல் அதிகரித்துள்ளது – அமெரிக்கா

இது தொடர்பாக மோடிக்கு அவர் எழுதியிள்ள கடிதத்தில், ”கொரோனா பரவலால் நம் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள், பிபிஈ கிட்கள் ஆகியவை பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை நீங்கள் (மோடி) நன்கு அறிவீர்கள். இந்த நெருக்கடியான நேரத்தில், திறந்த மனதுடன் இந்தியாவிற்கு உதவிட அண்டை நாடுகள்  தயாராக இருக்கின்றன. பாகிஸ்தான் அரசாங்கமும் ஈதி அறக்கட்டளையும் இந்தியாவிற்கு உதவிகளை வழங்கியுள்ளன” என குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

”நான் சர்வதேச எல்லையில் அமைந்திருக்கும் புனித நகரமாக அமிர்தசரஸில் இருக்கிறேன். பானிப்பட் ஆக்சிஜன் ஆலை இங்கிருந்து 350 கிலோமீட்டர் தொலைவிலும், லாகூர் ஆக்சிஜன் ஆலை 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன. அமிர்தசரஸிற்கு நாளொன்றுக்கும் 30 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு வழங்கும் ஆக்சிஜன் மிகவும் குறைவான அளவாக உள்ளது. பானிப்பட்டில் இருந்து வரும் ஆக்சிஜன் டேங்கர் தொடர்ச்சியாக வருவதற்கும், அவை பழுதானால் மாற்று டேங்கர்கள் ஏற்பாடு செய்யவும் போதிய வழிகள் இல்லை” என அவுஜ்லா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்