Aran Sei

சிறுபான்மையினரை புண்படுத்தியதாக காளிசரண் மகாராஜ்மீது புது வழக்கு: காவலில் எடுத்த புனே காவல்துறை

காத்மா காந்தியை அவதூறு செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்து மத சாமியார் காளிசரண் மகாராஜை, மற்றொரு வழக்கிற்காக சத்தீஸ்கர் காவல்துறையிடமிருந்து போலிஸ் காவலில் எடுத்துள்ளதாக புனே காவல்துறை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் உள்ள ராய்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, காளிசரண் மகராஜ் புனேக்கு அழைத்து வரப்படவுள்ளார் என்றும் அங்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் புனே காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள புனே கடக் காவல் நிலைய அதிகாரி ஒருவர், “நாங்கள் சத்தீஸ்கர் காவல்துறையிடம் இருந்து காளிசரனை காவலில் எடுத்துள்ளோம். அவர் விரைவில் புனேவுக்குக் கொண்டு வரப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு

முகலாய அரசின் தளபதி அப்சல் கான் சத்ரபதி சிவாஜி மகாராஜால் கொல்லப்பட்ட நாளைக் கொண்டாடும் வகையில், கடந்தாண்டு டிசம்பர் 19ஆம் தேதி, வலதுசாரி தலைவர் மிலிந்த் எக்போட் தலைமையிலான இந்து அகாதி அமைப்பால் ‘சிவ் பிரதாப் தின்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்நிகழ்வின் போது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக காளிசரண் மகாராஜ், மிலிந்த் எக்போட், திகேந்திர குமார் மற்றும் பலர் மீது புனே காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காளிச்சரண் மகாராஜ்க்கு பிணை மறுப்பு – செய்த குற்றத்திற்கு தேசதுரோக வழக்கு பதியலாம் என நீதிபதி கருத்து

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 295(ஏ) (மற்ற வகுப்பினரின் மத உணர்வுகளை சீர்குலைக்கும் மற்றும் தீங்கிழைக்கும் நோக்குடன் வேண்டுமென்றே செயல்படுதல்), 298 (ஒருவரின் மத உணர்வை புண்படுத்தும் நோக்குடன் செயல்படுதல்) மற்றும் 505(2) (வதந்தி, பகை, வெறுப்பு அல்லது தவறான செய்திகளை வழிபாட்டு தளங்களில் பரப்புவது) ஆகியவற்றின் கீழ் புனே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடனும் மக்களிடையே மதவாத பிளவை உருவாக்கும் நோக்கத்துடன் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அண்மையில், ராய்பூரில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியின்போது மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் காளிசரண் மகாராஜ் மீது வழக்குகள் உள்ளன. கடந்த வாரம் இவ்வழக்கு தொடர்பாக, சத்தீஸ்கர் காவல்துறை காளிசரண் மகாராஜை கைது செய்தது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்