Aran Sei

புல்வாமா தாக்குதல், அபிநந்தன் விடுதலை – பாகிஸ்தானில் அரசியல் சர்ச்சை

பாகிஸ்தானின் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும் மூத்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவருமான சர்தார் அயாஸ் சாதிக், “இந்தியாவிலிருந்து தாக்குதல் நடந்து விடும் என்று பயந்து போய், பிரதமர் இம்ரான் கான் அரசு அபிநந்தனை விடுவித்தது” என்று புதன் கிழமையன்று பேசியிருந்தார்.

2019-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் அபிநந்தனின் விமானம் வீழ்த்தப்பட்டு அவர் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டார்.

அபிநந்தன் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுடனான அமைதிக்கான நடவடிக்கையாக அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார்.

சென்ற புதன் கிழமையன்று, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய, அதன் முன்னாள் சபாநாயகர் சாதிக், பாகிஸ்தான் அரசு நாடாளுமன்ற தலைவர்களிடம் அபிநந்தனை விட்டு விட அனுமதிக்குமாறு மன்றாடியதாக கூறினார்.

“பிரதமர் இம்ரான்கான் கலந்து கொள்ள மறுத்து விட்ட அந்தக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இருந்தார். ராணுவ தலைமை அதிகாரியும் இருந்தார்” என்று அவர் கூறினார்.

கால்கள் நடுங்க, நெற்றியில் வேர்வை பொங்க, வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, “கடவுளின் பெயரால், அபிநந்தனை இப்போது போக விடுங்கள்” என்று எங்களிடம் கூறினார் என்று அவர் தெரிவித்தார். “தாக்குதல் எதுவும் நடக்கவிருக்கவில்லை. ஆனால், அடிபணிந்து அபிநந்தனை திருப்பி அனுப்ப விரும்பினார்கள்” என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

விவாதத்தின் போது இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், ஃபவாத் சவுத்ரி, “நாம் இந்தியாவுக்குள் புகுந்து தாக்கினோம். புல்வாமாவில் நமது வெற்றி இம்ரான் கானின் தலைமையில் நாட்டின் வெற்றி” என்று பேசினார். இது புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் நேரடி தொடர்பை காண்பிப்பதாக தி ஹிந்து நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது.

சாதிக்கின் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குள்ளாயின. இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் அவற்றை முக்கிய செய்தியாக வெளியிட ஆரம்பித்தன. அதன் பிறகு, சாதிக் தனது கருத்துக்கள் தவறாக மேற்கோள் காட்டப்பட்டதாக விளக்கம் வெளியிட்டார் என்று dawn.com செய்தித் தளம் தெரிவிக்கிறது.

வெளியுறவுத் துறை அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் “தேசிய நலனைக் கருதி” இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது என்று சாதிக் கூறியிருக்கிறார். “இம்ரான்கானின் முடிவு அவரது தலைமையின் பலவீனத்தைக் காட்டியது” என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்துவதற்காகத்தான் விடுவிக்கப்பட்டார் என்ற பாகிஸ்தான் வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

“இது போன்ற பொறுப்பற்ற கருத்துக்கள் அரசியல் ஆதாயத்துக்காகவே சொல்லப்பட்டிருக்கின்றன” என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார். அபிநந்தன் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதாக அவர் எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டியுள்ளார்.

“பாகிஸ்தான் விங் கமாண்டர் அபிநந்தனை அமைதி நடவடிக்கையாகவே விடுவித்தது என்றும் அது தொடர்பாக அரசின் மீது எந்த அழுத்தமும் இருக்கவில்லை” என்றும் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

எந்த ஒரு நாடும் ஏதாவது தவறான தாக்குதல்களை நடத்தினால் அவற்றை உறுதியாக எதிர்கொள்ள பாகிஸ்தான் முழுமையாக தயார் நிலையில் உள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது. சென்ற ஆண்டு 2 இந்திய விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியது, பாகிஸ்தானுக்கு எதிராக வெளியிலிருந்து வரும் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்வதற்கு பாகிஸ்தான் படைகள் தயார் நிலையில் இருப்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறியிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்