புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த தர்ணா போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்றும் கிரண்பேடியை திரும்பப் பெறாவிடில் உண்ணாவிரதம், முழு அடைப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மக்கள் நலத்திட்டங்களுக்கு தடையாகவும் முட்டுக்கட்டையாகவும் இருக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும் அவரை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தியும் மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணி கட்சிகள் கடந்த 8-ம் தேதி காலை முதல் அண்ணா சதுக்கத்தில் தொடர் தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.
இந்தப் போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இரவு பகலுமாக சாலையில் உண்டு உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) செயலாளர் முத்தரசன், மார்க்கிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
‘பிசி, எம்பிசி ஏழை மாணவர்களுக்கும் முழு கல்விக் கட்டணம் இலவசம்’ – புதுவை முதல்வர் அறிவிப்பு
இதையடுத்து போராட்டக் களத்தில் உரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படக்கூடாது, மத்திய அரசில் இருந்து நிதி கிடைக்கக்கூடாது என்று பல்வேறு வகையில் கிரண்பேடி தடையாக இருந்ததால் அவரை எதிர்த்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றும் புதுச்சேரியில் இரட்டை ஆட்சி முறையை பாஜக துணையுடன் கிரண்பேடி நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
‘பிசி, எம்பிசி ஏழை மாணவர்களுக்கும் முழு கல்விக் கட்டணம் இலவசம்’ – புதுவை முதல்வர் அறிவிப்பு
மேலும் பேசிய அவர், கொரோனாவிற்கு அச்சப்பட்டு வெளியில் வராமல் இருந்த கிரண்பேடி மீண்டும் உயிருக்கு பயந்து கொண்டு 7 அடுக்கு பாதுகாப்பை தனக்கு தானே போட்டுக் கொண்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி பேசினார். புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு கிரண்பேடி தான் பெறுப்பேற்க வேண்டும் எனவும் நாராயணசாமி பேசினார்.
’10 நாட்களில் கொரோனா தடுப்பூசி புதுச்சேரி வரும்’ – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
இந்நிலையில் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்று வந்த தர்ணா போராட்டம் நேற்று மாலையுடன் (10-1-21) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அடுத்த கட்டமாக வரும் ஜனவரி 22-ம் தேதி கிரண்பேடியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும், 29-ம் தேதி தொகுதி தோறும் ஆர்ப்பாட்டமும், பிப்ரவரி 5-ம்தேதி உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி இறுதிக்குள் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெறாவிடில், அதை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.