புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெறக்கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி புகார் அளித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் விதிகளை மதிக்காமல் ஒரு சர்வாதிகாரி போல கிரண் பேடி செயல்படுகிறாரென நாராயணசாமி, ராம்நாத் கோவிந்திடம் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று (பிப்ரவரி 10), குடியரசு தலைவரைச் சந்தித்து, துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் நடவடிக்கைகள் தொடர்பாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அளித்துள்ள ஐந்து பக்க புகார் பட்டியலில், புதுச்சேரியில் ஜனநாயக படுகொலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட விதிகள் மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளை மீறும் விதமாக நிர்வாகம், நிதி மற்றும் கொள்கை விஷயங்களில் ”ஒருதலைபட்சமாக” துணைநிலை ஆளுநர் செயல்படுகிறாரென நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளதோடு, ஜனநாயகம், கூட்டாச்சி அமைப்பு, புதுச்சேரி மக்களை பாதுகாக்கும் விதமாக, இந்திய அரசியலைமைப்பின் பாதுகாவலர் என்ற முறையில், குடியரசுத் தலைவர் தலையிட்டு, கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
”கிரண் பேடி ஜனநாயகமற்ற முறையில் துக்ளக் தர்பாரை நடத்தி வருவதோடு, சட்ட விதிகளை மீறிவருகிறார். அரசாங்க அச்சகம் தொடர்பாக ஆவணம் பெறப்பட்டபோது, புதுச்சேரியின் முதலமைச்சராகிய நானும், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரையும் நிலைமை தொடர முடிவு செய்திருந்த நிலையில், கிரண் பேடி தன்னிச்சையாக அச்சகத்தை மூட உத்தரவிட்டார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நான் விளக்கக் கடிதம் எழுதியபோது, கிரண் பேடி உத்தரவைத் திரும்பப் பெற்று, நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தினார்” என அந்தப் புகார் பட்டியலில் இருப்பதாக தி ஹிந்து கூறியுள்ளது.
திருநங்கை உரிமைக்காகப் போராடிய சமூக ஆர்வலர் ஸ்னேகா மரணம்: விசாரணையில் கேரள காவல்துறை
”பிரஞ்ச் காலணி ஆட்சி காலத்தில் கூட நாங்கள் இது போன்று மோசமாக நடத்தப்படவில்லை. அவர்கள் எங்களை மனிதர்களாக மதித்தார், அடிமைகளைப் போல நடத்தவில்லை” எனக் கூறியுள்ள நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெறுவதன் மூலம், அந்தப் பதவியின் கண்ணியத்தை காக்குமாறு குடியரசு தலைவரிடம் கோரியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.