ஒன்றிய அரசின் திரைப்பட தணிக்க சட்ட (திருத்த) வரைவுக்கு எதிராக திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட 6,494 பேர் கையெழுத்திட்டுள்ளனர். கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் வகையில் சட்ட திருத்த வரைவு இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திரைப்பட தணிக்கை சட்ட (திருத்த) வரைவு மீதான மக்கள் கருத்தை ஜூலை 2 ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி சட்ட திருத்த வரைவுக்கு எதிராக 6,494 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிட்டப்பட்டிருக்கும் அறிக்கையில், ஜூலை 1 ஆம் தேதி முதற்கட்டமாக 3,583 பேரும், கடைசி நாளான ஜூலை 2 ஆம் தேதிவரை 2,911 பேரும் கையெழுத்திட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
”தற்போதய காலக்கெடுவான ஜூலை 2 ஆம் தேதி என்பது வெறும் 14 நாட்கள் அவகாசத்தையே வழங்கியுள்ளது. ஆனால், அடிப்படை உரிமைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் சட்டங்கள்மீதான கருத்து கேட்பிற்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசின் கொள்கை கூறுகிறது. எனவே, கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை ஜூலை 18 ஆம் தேதிவரை நீட்டிக்க வேண்டும் என ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
கால அவகாசத்தை நீட்டிப்பதன் மூலம், இன்னும் கூடுதலாக பொது மக்கள், திரைப்பட சங்கத்தினர் மற்றும் பிற அமைப்பினர் அவர்களது கருத்துக்களை தெரிவிக்க முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கை சட்ட வரைவுக்கு எதிராக 9 மொழியைச் சார்ந்த முக்கிய திரைக்கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் திரையுலகைச் சேர்ந்த இயக்குனர்கள் பா. ரஞ்சித், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம் மற்றும் நடிகர்கள் சூர்யா, சுகாசினி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
”திரைக்கலைஞர்கள் மட்டுமல்லாது ஆவணப்பட இயக்குனர்கள், மேடை நாடக கலைஞர்கள், மற்ற கலைஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் ஐடி ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், மனித உரிமை அமைப்பினர் உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்“ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.