Aran Sei

‘பிஎஸ்பிபி பள்ளியில் நடந்த சம்பவம் என் தூக்கத்தை கெடுத்துள்ளது’: முன்னாள் மாணவர் ரவிச்சந்திரன் அஷ்வின் வேதனை

credits : India tv news

”ராஜகோபாலன் எனும் ஒரு பெயர் தான் வெளியில் வந்துள்ளது, வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க, நாம் நடவடிக்கை மேற்கொண்டு, இந்த அமைப்பை முற்றிலுமாக மாற்ற வேண்டும்” என்று பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கேட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

சென்னையின் கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலும், பாலியல் துன்புறுத்தலும் செய்த வணிகவியல் (Commerce) ஆசியர் கே.கே.ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்திருந்தனர்.

மேலும், இவர் மீது பல்வேறு காலகட்டங்களில் புகார் அளிக்கப்பட்டாலும், பள்ளி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘செயலற்று கிடக்கும் தமிழக பாஜக; பிஎஸ்பிபிக்கு ஆதரவாக நான் களமிறங்குவேன்’ – சுப்ரமணியன் சுவாமி எச்சரிக்கை

இதைடுத்து, பாலியல் சீண்டல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் கே.ராஜகோபாலனை கைது செய்த காவல்துறை, போக்சோ சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அப்பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

‘பார்ப்பனிய கட்டமைப்பும் ஆணாதிக்க சிந்தனையும் கொண்டதுதான் பிஎஸ்பிபி பள்ளி’ – டி.எம்.கிருஷ்ணா விமர்சனம்

இந்நிலையில், இந்திய கிரிக்கேட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”பத்ம சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியின் முன்னாள் மாணவனாகவும், இரண்டு பெண் குழந்தைகளின் தகப்பனாகவும், கடந்த இரண்டு நாட்கள் எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. ராஜகோபாலன் எனும் ஒரு பெயர் தான் வெளியில் வந்துள்ளது. வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க, நாம் நடவடிக்கை மேற்கொண்டு, இந்த அமைப்பை முற்றிலுமாக மாற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

‘பாலியல் சீண்டல் புகாரைக் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம்’ – பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தயாநிதி மாறன் வேண்டுகோள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் இருந்து வெளிவரும் கதைகள் மனதிற்கு வேதனையாக உள்ளது. அதிலும் குறிப்பாக பிஎஸ்பிபி பள்ளியின் கே.ராஜகோபாலன், பற்றி வெளியாகும் செய்திகள் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதே பள்ளியில் பல ஆண்டுகள் படித்தும் அவரைப் பற்றி எனக்கு தெரிந்திருக்கவில்லை. சட்டமும் நீதித்துறையும் அதன் கடமையை செய்யும். ஆனால், இந்தத் தருணத்தில் தான் மக்கள், இந்த அமைப்பை சுத்தம் செய்து மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இந்த கடினமான காலகட்டத்திலும் கூட, நமது குழந்தைகளுக்கு (நம்மிடம் பேச) எந்த வாய்ப்பும் கொடுக்காமல் அவர்களின் வலிகளை சமூக வலைதளங்களில் தெரிவிக்க வைத்திருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது புகார்: போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முன்னாள் மாணவர்கள் வேண்டுகோள்

மேலும், “தாங்கள் ஆபத்தில் இருப்பது போன்ற குழந்தைகள் உணரும் ஒரு சிறிய தவறு நடந்தால் கூட குழந்தைகள் நம்மிடம் தெரிவிக்கும் வகையிலான சுற்றுச்சூழலை உருவாக்கி, மதிப்பெண் போன்ற விஷயங்களில் இருந்தெல்லாம் குழந்தைகள் அச்சப்படுவதில் இருந்து பாதுகாக்க வேண்டும்.நமது குழந்தைகள், தான் நமது சொத்து. கல்வி என்பது முக்கியமானது தான். ஆனால், அதுவே எல்லாம் அல்ல. எனவே நாம் நமது குழந்தைகளை, அவர்களுடைய இயல்புடனும், அவர்களுடைய குழந்தை பருவத்துக்கு கிடைக்க வேண்டிய புனித்தத்தையும் தர வழிவகை செய்ய வேண்டும்” என்றும் அறிக்கையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்