Aran Sei

நாடு முழுவதும் மாநில,மாவட்ட தலைநகரங்களில் டிராக்டர் பேரணி – விவசாய சங்கங்கள் அறிவிப்பு

விவசாயிகள் சங்கங்களின் ஒற்றுமையும் சமூகத்தின் பல பிரிவுகளிலிருந்து வரும் ஆதரவும் தான், விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடக்கும் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறது என்று கிராந்திகாரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி – வரலாறு காணாத அரசு கொள்முதல்

நேற்று (ஜனவரி 15), போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராந்திகாரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது, “வரும் ஜனவரி 26 அன்று விவசாயிகள் சங்கங்களால் அறிவிக்கப்பட்ட டிராக்டர் பேரணியின் நோக்கம் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பதல்ல. மேலும், நாங்கள் கேட்பது இந்தியா கேட், ராஜ்பாத், லால் குய்லா, நாடாளுமன்றம் போன்றவை அல்ல. மாறாக, டெல்லியில் நாங்கள் கேட்பது, குடியரசு தினத்தன்று விவசாயிகள் தங்கள் டிராக்டர்களிலும் வாகனங்களிலும் அணிவகுத்துச் செல்ல தேவையான ஒரு வழியை தான்.”என்று அவர் கோரியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

‘போராடும் விவசாயிகளை தேசவிரோதிகள் என்று சாயம் பூசும் மத்திய அரசு’ – சிவசேனா கண்டனம்

“கடந்த இரண்டு மாதங்களாக எத்தனை பேர் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர் என்பதை அரசுக்கு  நாங்கள் காட்ட விரும்புகிறோம். இந்த டிராக்டர் பேரணியானது, டெல்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும். இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியினரும் விவசாயிகளுக்குத் தங்களது ஆதரவை வழங்கி வருவதைக் காட்ட விரும்புகிறோம். அதைச் செய்ய அவர்களுக்கு அரசியலமைப்பில் உரிமை உண்டு. ஆனால் அரசு இந்தப் பேரணியைத் தடுக்க முயற்சி செய்தால், அது எல்லோருக்கும் அம்பலமாகிவிடும்.”  என்று தர்ஷன் பால் எச்சரித்துள்ளார்.

மேலும், “இந்த டிராக்டர் பேரணிக்கு மத்திய அரசிடம் விவசாயிகள் தொடர்ந்து அனுமதி கோரி வருகிறார்கள். இதுதொடர்பான பிரச்சினைகள் குறித்து அனைத்து விவசாயிகள் சங்கங்களும் விரைவில் கலந்தாலோசிக்க உள்ளன. நாங்கள் சட்ட நிபுணர்களின் கருத்தையும் பரிசீலித்து ஒரு முடிவை எடுப்போம்.” என்று அவர் உறுதியளித்துள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

போகி நெருப்பில் கொளுத்தப்பட்ட விவசாய சட்ட நகல்கள் – கைது செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

“மூன்று விவசாய சட்டங்களின் பாதிப்பானது பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளோடு மட்டும் சுருங்கிவிடவில்லை. உண்மையில் நாடு முழுவதும் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்படும். அவை அனைத்தும் நடந்து வரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.” என்று தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.

“இந்தச் சட்டங்களைத் தவிர, விவசாயிகளின் கடன் பிரச்சனையும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான விவாதமும் இந்தத் தொடர்ச்சியான போராட்டத்தின் வழியாக முக்கியமான பேசு பொருளாகியுள்ளது. மேலும், இந்தப் போராட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்களிடையேயான ஒற்றுமைக்கு வழிவகுத்துள்ளது. இந்தப் பின்னணியில் பார்த்தால், இந்தப் போராட்டமானது நாடு முழுவதும் தீவிரமடையும் என்று நான் நம்புகிறேன்.” என்று கிராந்திகாரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்