Aran Sei

சட்டநீக்கம் அல்ல நிறுத்திவைப்பு தான்: ‘எங்கள் தலைக்கு மேல் கத்தியை தொங்கவிடும் மத்திய அரசு’ – விவசாயிகள் வேதனை

மூன்று விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முன்மொழிவை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்கள் நிராகரித்துள்ளன.

மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரையிலும், விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் இயற்றப்படும் வரையிலும், தங்களின் போராட்டத்தைத் தொடரவுள்ளதாக விவசாய சங்கங்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளன.

“எந்த நாட்டிலும் எந்த சட்டமும் முழுவதும் ரத்து செய்யப்பட்டதில்லை” – விவசாயிகள் போராட்டம் குறித்து ஆர்எஸ்எஸ் கருத்து

நேற்று முன்தினம் (ஜனவரி 20) விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்களுக்கும், மத்திய அரசிற்கும் இடையேயான 10-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.  மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் ஆகியோரும் விவசாயிகளின் சார்பில் 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர சிங் தோமர், “ஒரு ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க அரசு தயாராக உள்ளது. இந்தக் காலகட்டத்தில் அரசு பிரதிநிதிகளும் விவசாயிகளின் பிரதிநிதிகளும் ஒரு தீர்வை காண்பார்கள். தீர்வு என்னவாக இருந்தாலும் அது முன்னெடுத்துச் செல்லப்படும்.” என்று கூறியிருந்தார்.

” பணிந்தது மத்திய அரசு ” – மூன்று சட்டங்களை ரத்து செய்வதில் விவசாயிகள் உறுதி

இந்நிலையில், நேற்று (ஜனவரி 21) மாலை, டெல்லி சிங்கு எல்லையில், போராடும்  விவசாயிகள் சங்கங்களின் கூட்டு முன்னணியான சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் பொதுக் குழு, ஐந்து மணி நேரக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில், மூன்று விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முன்மொழிவை, நிராகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரையிலும், விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் இயற்றப்படும் வரையிலும், போராட்டத்தைத் தொடரவுள்ளதாக கூறிய சம்யுக்ட் கிசான் மோர்ச்சா,  இந்த முடிவை, இன்று (ஜனவரி 22) நடக்கவுள்ள பதினொன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில்  மத்திய அரசிடம் தெரிவிக்கவுள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் – அமித் ஷா

இந்த சம்யுக்ட் கிசான் மோர்ச்சா கூட்டத்தில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத சில விவசாயிகள் சங்கத் தலைவர்கள், விவசாய சட்டங்களை நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்க, மத்திய அரசை வலியுறுத்தலாம் என்று கூட்டத்தில் கோரியதாகவும், ஆனால், இந்த முடிவுக்கு கூட்டத்தில் உள்ள எல்லா சங்கங்களும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் கூறியதாக தி இந்து  தெரிவித்துள்ளது.

“சட்டங்களை நிறுத்தி வைப்பதும் அதை திரும்பப் பெறுவதும் ஒன்றல்ல. மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.”என்று பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவரான ராகேஷ் டிக்கிட்  தி இந்துவிடம் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – எதிர்கட்சிகள் ஒன்றிணைய சிபிஎம் கோரிக்கை

“ஒரு ஆண்டோ அல்லது ஒன்றரை ஆண்டுகளோ சட்டங்களை நிறுத்தி வைப்பது விவசாயிகளுக்கு கூடுதல் செலவை தான் தரும். மேலும், அது விவாயிகளின் தலைக்கு மேல் கத்தியை தொங்கவிடுவது போன்றது.” என்று பாரதிய விவசாயிகள் சங்கத்தின்  செயலாளர் ஷிங்கரா சிங் மான் தெரிவித்துள்ளார்.

“நீக்க கோரும் சட்டங்களை 18 மாதங்களுக்கு மட்டும் நிறுத்தி வைப்பதாக கூறுவது,  அரசின் பிடிவாதமான முடிவாகவும் அதேநேரம் சூழ்ச்சி நிறைந்த ஒன்றாகவும் உள்ளது என்று விவசாயிகள் உறுதியாக எண்ணுகிறோம். அவர்களின் (மத்திய அரசு) அடிப்படை நோக்கமே, போராட்டத்தை நிறுத்தி எங்களை போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றுவது தான். இதை தான் அவர்கள் எங்களிடம் திரும்ப திரும்ப சொல்கிறார்கள்.” என்று ஜெய் கிசான் அந்தோலன் சங்கத்தை சேர்ந்த அவிக் சஹா குறிப்பிட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானம் : சட்டசபையில் நிறைவேற்ற ஸ்டாலின் கோரிக்கை

மேலும், “இந்த போராட்டத்தில் வலிமை இருக்கிறது. உண்மைகள் இருக்கிறது. மதிப்புகள் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். பிறகு,   நாங்கள் ஏன் இதை கைவிட வேண்டும்?” என்று  அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று 11 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இருக்கும் நிலையில்,  மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் மத்திய அமைச்சர்களின் குழுவுக்கு தலைமை தாங்கும்  விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,  நேற்று (ஜனவரி 21) மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்