Aran Sei

முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட மெட்ரிக் பள்ளி – மாணவர்களும் பெற்றோரும் போராட்டம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் ராமச்சந்திரா மெட்ரிக் பள்ளி, திடீரென மூடப்படும் என்று அறிவித்ததாக கூறி, பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இன்று (மார்ச் 1), ராமச்சந்திரா மெட்ரிக் பள்ளிக்கு முன்பு நடந்த போராட்டத்தில், அப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

இப்போராட்டம் குறித்து, தன் ஆறாம் வகுப்பு மகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட மீனாட்சியிடம் அரண்செய் பேசிய போது, “நேற்று எங்களுக்கு பள்ளியை நிர்வகித்து வரும் அறக்கட்டளையில் இருந்து பள்ளி மூடப்படுவதாக தெரிவித்து நோட்டீஸ் வந்தது. நாங்கள் இன்று காலை பள்ளிக்கு சென்று கேட்டோம். சரியான பதிலை தராததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பள்ளியை வேறொருவருக்கு விற்றுவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை.” என்று கூறினார்.

‘பட்ஜெட்டில் வரலாற்றுப் பிழை; பள்ளிக் கல்வித்துறைக்கு நிதியே ஒதுக்காத அவலம்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

இதற்கு முன்பாக, பள்ளி மூடப்படுதற்கான அறிகுறிகள் நிர்வாகத்தின் செயற்பாடுகளில் தென்பட்டதா என்று எழுப்பிய கேள்விக்கு, “சென்ற வருடம் எல்கேஜி மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான சேர்கைகள் நடைபெறவில்லை. அப்போதே, விரைவில் பள்ளி மூடப்பட்டுவிடும் என்பது போலான பேச்சுகள் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், அப்போதும் பள்ளி நிர்வாகம் இக்குழப்பத்தை தீர்க்கும் விதமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஆசிரியர்களிடம் விசாரித்ததற்கும், அவர்கள் அப்படி ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இப்போது கேட்டதற்கும் இதே பதிலைத்தான் ஆசிரியர்கள் அளிக்கிறார்கள்.” என்று மீனாட்சி தெரிவித்தார்.

“இப்போது காவல்துறை உயரதிகாரிகள் போராட்டத்தை கைவிட்டு விட்டு, நிர்வாகத்திடம் பேசுங்கள் என்று கூறுகிறார். தெருவில் இறங்கி போராடிக்கொண்டிருக்கும் போதே, இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டப்படாமல் உள்ளது. நிர்வாகத்திடம் பேசினால் மட்டும் நியாயமான தீர்வு கிடைத்து விடுமா?” என்று மீனாட்சி கேள்வி எழுப்பினார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: ‘சமஸ்கிருதம் கட்டாயம்; தமிழ் கட்டாயம் இல்லை’ – ஸ்டாலின் கண்டனம்

இக்கல்வியாண்டிற்கான பள்ளி கட்டணங்கள் முழுமையாக வசூலிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, “ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு வாரம் மூன்று நாட்கள் மட்டும்தான் இணையவழி வகுப்புகள் இருக்கும். அதற்கான கட்டணத்துடன், புதிய புத்தகங்கள் நோட்டுகளுக்கான கட்டணம் எட்டாயிரம் ரூபாயையும் சேர்த்து வசூலித்து விட்டார்கள். அதற்கு அத்தனை மெசேஜ்ஜுகள் அனுப்புவார்கள். ஆனால், இப்போது எல்லாம் வீணாக போய்விட்டது. இனி, அந்த நோட்டு புத்தகங்கள் வீண். வெள்ளிக்கிழமை வரையிலும், பலர் கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். அப்போது கூட, நிர்வாகம் இது குறித்து ஒன்று சொல்லவில்லை.” என்று மீனாட்சி கூறினார்.

மேலும், “நாங்கள் வீட்டு வேலை செய்பவர்கள். பள்ளிக்கட்டணத்தை கஷ்டப்பட்டுதான் செலுத்துகிறோம். ஆனால், பள்ளி நிர்வாகம் எங்களை ஏமாற்றி விட்டது. இந்த பிரச்சனையை வெளிக்கொண்டுவர, ஊடகங்களை அழைத்தோம். ஆனால், இந்த அறக்கட்டளை தினத்தந்தி நிறுவனத்தை சேர்ந்ததால், பல ஊடகங்கள் இந்த போராட்டத்தைப் பற்றி பேச மறுத்து விட்டன. அரசியல்வாதிகளும் இதுவரை எட்டிப்பார்க்கவில்லை.” என்று மீனாட்சி அரண்செய்-யிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, பள்ளி நிர்வாகத்தை தொடர்புகொள்ள அரண்செய் முயன்றது. ஆனால், அவர்கள் தரப்பில் பதில் அளிக்கவில்லை.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்