Aran Sei

கோவை பள்ளியில் ஆர்எஸ்எஸ்ஸின் ஷாகா பயிற்சியை நிறுத்த கோரி போராட்டம் – கோவை இராமகிருட்டிணன் உட்பட பலர் கைது

கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா தனியார் பள்ளியில் நடைபெற்று வந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் (தபெதிக) உட்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ தர்மசாஸ்தா தனியார்ப் பள்ளியில் நேற்று(டிசம்பர் 29) ஷாகா பயிற்சி நடந்து வந்ததை அறிந்த தபெதிக-வினர் அந்த பள்ளிக்கே சென்று அதனைக் காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டனர். அதனைதொடர்ந்து, இந்த ஷாகா பயிற்சியைத் நிறுத்தாவிட்டால் போராட்டம் நடைபெறும்  என தபெதிக உட்பட பல்வேறு முற்போக்கு அமைப்புகள் அறிவித்தன.
ஆனாலும் ஷாகா பயிற்சி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தடை செய்ய வேண்டும் என்று இன்று காலை அப்பள்ளியின் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதி தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தை, மக்கள் அதிகாரம், மே 17, திராவிடர் தமிழர் கட்சி, புரட்சிகர இளைஞர் மாணவர் முன்னணி உட்பட  பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பலரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அதனால் போராட்டக்காரர்கள் சாலையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன்  உட்பட 46 பேரை முதலில் காவல் துறையினர்  குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று  கைது செய்தனர்.
இந்த போராட்டத்திற்குப் பிறகு தபெதிக மனோஜ் அவர்களை அரண்செய் தொடர்பு கொண்டு பேசியபோது, “இன்னமும் ஆர்எஸ்எஸ் நபர்கள் பள்ளியின் உள்ளே இருந்து கொண்டு ஷாகா பயிற்சியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  இந்த பயிற்சிக்குச் சட்ட ரீதியான அனுமதி இல்லை. இது தனியார் பள்ளி அதனால் அங்கு நடைபெறும் ஷாகா பயிற்சியை நீங்கள் தடுக்கக் கூடாது என எங்களிடம் காவல்துறை கூறுகிறது. அண்மையில் கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் சட்டவிரோதமாகப் பெண்களுக்கான பயிற்சியை ஆர்எஸ்எஸ் அளிப்பதாக வந்த தகவலை ஒட்டி மாவட்ட ஆட்சியரிடம் தபெதிக சார்பாக மனு கொடுத்தோம். மாவட்ட ஆட்சியரும் இதற்கு உடனே நடவடிக்கை எடுத்து இந்த பயிற்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளார்” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த பள்ளியில் இப்போது நடைபெறும் ஷாகா பயிற்சியைத் தடுக்கா விட்டால், இனிமேல் எல்லா இடங்களிலேயும் ஷாகா பயிற்சியை அவர்கள் நடத்த ஆரம்பிப்பார்கள். இதனைத் தடுத்துக் கொண்டிருப்பதே நமது வேலையாக மாறிவிடும். அதனால் தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு இதனைச் சரி செய்ய வேண்டும்” என்று தபெதிக மனோஜ் கோரிக்கை வைத்தார்.
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்