முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ, முத்தரசன் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். போரின் இறுதி மூன்று நாட்களில் மட்டும், சுமார் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
’ஈழத் தமிழர்களின் சுயமரியாதையைப் பறிக்கும் இலங்கை அரசு’ – டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கும் என்று பல்வேறு அரசு சாரா அமைப்புகள் தெரிவித்துள்ளன.
போரில் உயிரிழந்த மக்களின் நினைவாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் என்ற பெயரில் ஒரு நினைவிடத்தை மாணவர்கள் கட்டினர். இதற்கு பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெறப்பட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தில் முல்லிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு – மாணவர்கள் போராட்டம்
இந்த நினைவிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த சமயத்திலேயே, அதை நிறுத்த வேண்டும் என்று, இலங்கை உயர் கல்வித்துறையும், பல்கலைக் கழக மானியக் குழுவும் உத்தரவிட்டதாக ஐபிசி தமிழ் தெரிவிக்கின்றது.
ஆனால், அந்த உத்தரவையும் மீறி மாணவர்கள், நினைவிடத்தை கட்டி முடித்ததுடன், அந்த இடத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை, ஜனவரி 8-ம் தேதி இரவு, இலங்கை அரசு இடித்துதள்ளியது. இதற்கு இருநாடுகளையும் சேர்ந்த பல தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இச்செயலைகண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிவித்தார். அதன்படி, நுங்கம்பாக்கம் புஷ்பாநகர் குளக்கரை சாலை, மகாலிங்கபுரம் பிரதான சந்திப்பில் நேற்று (ஜனவரி 11) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கியுள்ளார். திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு, மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உட்பட 13 கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கைக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவி: ராஜபக்சேவுக்கு உறுதியளித்த மோடி
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய வைகோ, “இலங்கைத் தமிழரின் வரலாறு சொல்லும் எச்சங்களை அழித் தொழிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை ராணுவம் ஈடுபட்டு வருகிறது. கிளிநொச்சி உட்பட இலங்கையின் பல இடங்களில் போர் வெற்றிகளை குறிக்கும் வகையில் ஸ்தூபிகளை ராணுவத்தினர் அமைத்துள்ளனர். தற்போது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை இடித்து தள்ளியிருப்பதன் மூலம், இலங்கை அரசு கந்தக கிடங்கில் நெருப்புப் பொறியை விழச் செய்திருக்கிறார்கள்.” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், “இவ்வளவு நடந்த பிறகும் இந்திய அரசானது இலங்கையை கண்டிக்காமல் இருக்கிறது. இன்று இந்த போராட்டம் முடக்கப்படலாம். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக எதிர்காலத்தில் இளைஞர் படை எழுச்சியுடன் போராடும். அந்த நாள் நிச்சயம் வரும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், “முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு இந்தியா அரசு தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை சென்று திரும்பிய ஓரிரு நாளில் இந்த அக்கிரமம் நிகழ்ந்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஓர் இனத்தையே அழித்துவிட்டு, கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் அதற்கான ஆவணங்களையும் அழிக்க முனைகின்றனர். ஆகவே இதை நாம் தடுக்காவிட்டால் பெரிய விளைவுகளை தமிழர்கள் அங்கே எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும் – சபா நாவலன்
இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து வைகோ,முத்தரசன் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து சூளைமேட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்துள்ளனர். போராட்டத்தை முன்னிட்டு இலங்கை தூதரகத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.