Aran Sei

நபிகளை இழிவுப்படுத்தி பாஜக கல்யாண ராமன் பேச்சு: இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து கைது

ரசியல் தலைவர்கள்மீதும் இந்து மதம் அல்லாத பிற மதங்கள்மீதும் வன்மமான முறையில் பொதுவெளியில் பதிவிட்டுவரும் பாஜக நிர்வாகி கல்யாணராமன், தற்போது நபிகள் நாயகத்தை இழிவு படுத்தியதாக எழுந்த புகாரையடுத்து இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்வில்,  பாஜக நிர்வாகி கல்யாணராமன் இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகளை இழிவு படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. இதற்குத் தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள்  மற்றும் ஜனநாயக அமைப்புகள் கல்யாணராமனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘மதக்கலவரம் நடக்கும்…’ இஸ்லாமியர்களை மிரட்டிய நபர் – வேடிக்கை பார்த்த போலீஸ்

இந்த நிலையில், நேற்று (ஜனவரி 31) இரவு, கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கோவையில் உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை (தமுமுக) சேர்ந்தவர்களும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, “அமைதி பூங்காவான தமிழகத்தை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் கல்யாண ராமனை அனுமதிக்காதே.” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, பாஜக நிர்வாகி கல்யாண ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது: ‘இஸ்லாமியர் என்பதால் பலிகடா ஆனேன்’ – நதீம்

இதுகுறித்து, விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “அரசே, நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தி அநாகரிகமாகப் பேசிய இழிபிறவியைக் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய் இசுலாமியர்களை ஆத்திரமூட்டி ஒருங்கிணைய வைப்பதன்மூலம், மதவெறியைத் தூண்டி இந்து முஸ்லீம் என மக்களைப் பிளவுப்படுத்த சனாதன பாஜக சதிமுயற்சியில் ஈடுபடுகிறது.” என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆட்சேபகரமான, ஆபாசமான பேச்சுகளாலும், சமூக ஊடகப் பதிவுகளாலும், தமிழகத்தின் சமூக அமைதியைக் குலைப்பதையே நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருபவர் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்த கல்யாண ராமன் என்பவர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளோம்” – இஸ்லாமியர்களை பழிவாங்கும் உத்தரபிரதேச அரசு

இவரது ஆபாசமான பதிவுகள் முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்தது குறித்து கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பல முறை அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று எம் எச் ஜவாஹிருல்லா நினைவுப்படுத்தியுள்ளார்.

“நேற்று ஜனவரி 31 அன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில், அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள்குறித்து அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சுகள் முஸ்லிம்களையும், நல்லிணக்கம் பேணும் சகோதர இந்து, கிறிஸ்தவ மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளன.  சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருணத்தில் வகுப்பு கலவரத்தைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் ரகசியத் திட்டத்தின் அடிப்படையில் அவர் மேட்டுப்பாளையத்தில் நச்சுக் கருத்துகளைப் பேசினாரோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தாக்குதலில் இஸ்லாமிய இளைஞர் மரணம் – குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு

தொடர்ந்து முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தி, சமூகப் பதற்றத்தை உருவாக்கிவரும் கல்யாணராமன் மீதும் அவரைப் பின்னாலிருந்து இயக்குபவர்கள் மீதும், காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்