அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, ஜேஎன்யூ முன்னாள் மாணவ தலைவர் உமர் காலித் மீது வழக்கு தொடுக்கக் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
“டெல்லிக் கலவரம் தொடர்பான அனைத்துக் குற்றங்களிலும் வழக்கு தொடுக்க, நாங்கள் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளோம். இப்போது, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிவது நீதிமன்றங்களின் கையில் உள்ளது” என்று டெல்லி அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக ‘தி இந்து‘ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு டெல்லியில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டிற்கும் எதிராகக் கடந்த பிப்ரவரி மாதம் பெரும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறைச் சம்பவங்களைத் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, உமர் காலித் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர டெல்லி அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அனுமதி கிடைத்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
“யுஏபிஏவின் 13 வது பிரிவின் கீழ் ஒருவர் மீது வழக்குத் தொடர, மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். அதனை நாங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டோம். யுஏபிஏவின் 16, 17 மற்றும் 18-ம் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர, டெல்லி அரசிடமிருந்து எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
உமர் காலித் மீது வழக்கு தொடர்வதற்கான அனுமதி பதினைந்து நாட்களுக்கு முன்னரே கிடைத்துவிட்டதாகவும் அவரது பெயரைத் துணை குற்றப் பத்திரிகையில் இப்போது பதிவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.