Aran Sei

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக சிறையிலடைக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபா: பணிநீக்கம் செய்த கல்லூரி

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டி, சிறையிலடைக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபாவை பணி நீக்கம் செய்வதாக அவர் பணியாற்றிய டெல்லி ராம் லால் ஆனந்த் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு டெல்லி ராம் லால் ஆனந்த் கல்லூரியில் சேர்ந்த சாய்பாபா, ஆங்கில உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு சாய்பாபா உட்பட ஐந்து பேருக்கு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புகள் இருக்கிறது என்றும்,  நாட்டிற்கு எதிராக சதித்திட்டம் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்றும் குற்றம் சாட்டி, நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

’அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட சிறையில் அனுமதி இல்லை’ – பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கறிஞர்

சாய்பாபா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அக்கல்லூரியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

பேராசிரியர் சாய்பாபாவின் மனைவி வசந்தா ஒரு இல்லத்தரசி. அவர்களின் மகள் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டயாய்வு (எம்.ஃபில்) மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சாய்பாபாவின் மனைவி வசந்தாவுக்கு அனுப்பப்பட்ட மார்ச் 31 ஆம் தேதியிட்ட கடிதத்தில்,  “2021 ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி மதியம் முதல், உதவி பேராசிரியர் டாக்டர் ஜி.என். சாய்பாபா, ராம் லால் ஆனந்த் கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுகிறார். அவரின் மூன்று மாத சம்பளம் அவரது வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்டது.” என்று கல்லூரி முதல்வர் ராகேஷ் குமார் குப்தாவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`மருந்துகளைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்” – பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரம் இருக்க முடிவு

இதுகுறித்து பேசிய வசந்தா, “எங்களுக்கு  2019 ஆம் ஆண்டு அக்கல்லூரியில் இருந்து இவ்வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியிருந்தார்கள். நாங்கள் சாய்பாபாவிடம் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் நேரம் கேட்டோம். ஆனால், கடந்த ஆண்டு, அவரைச் சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கூட அளிக்கப்படவில்லை. அவரின் சம்பளத்தை நாங்கள் எங்கள் குடும்ப கடன்களை அடைக்கப்பயன்படுத்துகிறோம்.” என்று கூறியுள்ளார்.

சாய்பாபாவுக்கான பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான குழுவை சேர்ந்த டெல்லி பல்கலைக்கழக ஆசிரியை நந்திதா நரேன்,  “எஸ்.ஏ.ஆர். கீலானி விவகாரத்தில் (நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பிருப்பதாக கூறி கைது செய்யப்பட்டார்) அவர் இடைநீக்கம் செய்யப்பட்டாரே அன்றி, பணி நீக்கம் செய்யப்படவில்லை. அதனால், அவர் விடுதலை செய்யப்பட்டபோது மீண்டும் பணியில் சேர முடிந்தது.” என்று நினைவூட்டியுள்ளார்.

பேராசிரியர் சாய்பாபாவுக்கு கொரோனா நோய்த்தொற்று : அவரை பராமரிப்பது பற்றி மனைவி கேள்வி

பேராசிரியர் சாய்பாபா போலியோவால் பாதிக்கப்பட்டவர். 90% உடல் செயல்திறனை இழந்தவர். கணைய அழற்சி, உயர் ரத்த அழுத்தம், இதயத் தசை நோய் மற்றும் நாள்பட்ட முதுகுவலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் என்பது கவணிக்கத்தக்கது.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்