Aran Sei

‘டெல்லி கலவரத்தைப் பற்றித் தகவலைத் தெரிவிக்க மக்கள் முன்வர வேண்டும்’ – குடிமக்கள் குழு

Image Credits: Outlook India

டெல்லி கலவரத்தை விசாரிக்கும் குடிமக்கள் குழு, வன்முறையைப் பற்றிய தகவல் மற்றும் ஆதாரங்களுள்ள அனைவரையும், தனிப்பட்ட முறையில் உறுப்பினர்களை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அரசியலமைப்பு நடத்தை குழு (சிசிஜி), பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து சுயாதீனமாக விசாரிக்க, இக்குடிமக்கள் குழுவை உருவாக்கியது. சிசிஜி என்பது மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசு நிறுவனங்களில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளின் கூட்டுக்குழு ஆகும்.

குடிமக்கள் விசாரணை குழுவில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர், சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் , சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி ஏ.பி.ஷா, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி, பாட்னா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ், முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் முன்னாள் இயக்குநர் மீரன் சாதா போர்வங்கர் ஆகியோர் உள்ளனர்.

“டெல்லி கலவரம் தொடர்பான தகவல்கள் உள்ள அனைவரையும், அதனை முடிந்தவரை விரிவாகக் குழுவுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்,” எனும் அறிவிப்பைக் குடிமக்கள் குழு வெளியிட்டுள்ளது.

“இந்தத் தகவலை ஆராய்ந்த பின் தேவைப்பட்டால் சிலர் விசாரணைக்கு அழைக்கப் படுவார்கள். குழு அவர்களின் அடையாளத்தை ரகசியமாகப் பாதுகாக்கும்,” என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தகவல்களையும் ஆதாரங்களையும் இங்கே சமர்ப்பிக்க இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. (https://www.dev.citizenscommitteeondelhiriots.in/submission-form)

பொது அறிவிப்பின்படி, இந்தக் குழுவின் நோக்கம்:

  1. கலவரங்களுக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த நிகழ்வுகளை விசாரிப்பது. வன்முறையைக் கையாள்வதில் அரசு இயந்திரங்கள் காட்டிய முனைப்பு, சட்டம் ஒழுங்கை மீட்டமைத்தலில் காவலர்களின் பணி குறித்த விசாரணை.
  2. கலவரங்களை குறித்து விசாரிக்கும் போது, காவல்துறையினர் பதிவு செய்த தகவல்களை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்தல்.
  3. கலவரத்தின்போதும், அதற்கு முன்னும், பின்னும், உண்மை மற்றும் போலி செய்திகளை பரப்பிக் கலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதான மற்றும் சமூக ஊடகங்களின் பங்கை ஆராய்வது.
  4. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இழப்பீடுகளை வழங்குவதற்கும் முயற்சித்த சிவில் நிர்வாகத்தின் பணியை மதிப்பிடுவது.

“கொள்கைகளின் கட்டமைப்பிற்குள், குழு, அனைத்து முதன்மை தரவுகளையும் சேகரித்து ஆராயும். இதில் கலவரத்தை நேரில் கண்ட சாட்சி, எஃப்ஐஆர், குற்ற பத்திரிகை, அரசு நிறுவனங்கள் தயாரித்த பிற ஆவணங்கள், ஆடியோ வீடியோ ஆதாரங்கள் ஆகியவை அடங்கும். ஏற்கனவே பொது களத்தில் உள்ள அறிக்கைகள் மற்றும் தகவல்கள் உள்ளிட்ட இரண்டாம் வகை தரவுகளையும் குழு மதிப்பாய்வு செய்யும்,” என்று இதன் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் என ‘தி வயர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சிசிஜி, விசாரணைக் குழுவை அமைக்கும்போது, “2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்களின் கொடூரமான தன்மை, வன்முறையின் அளவு, உயிர் இழப்பு மற்றும் சமூகங்களுக்கிடையேயான மதவாத பிளவு ஆகியவை ஒரு நிபுணர் அமைப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன” என்று கூறியது. “கலவரத்தின் போதும், அதற்கு முன்னும், பின்னும் என்ன நடந்தது என்பதைப் பற்றி முழுமையான ஆய்வு செய்ய இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது,” என்றும் அது தெரிவித்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்