Aran Sei

ட்ரம்ப் ஆதரவுப் பேரணியில் வன்முறை – ஒருவர் சுட்டுக்கொலை – மூன்றுபேர் கைது

Image Credits: The Hindu

மெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள் அங்குள்ள பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். டிரம்புக்கு எதிராகப் போராடியவர்களுடன் இவர்கள் கைகளப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆகவே, வாஷிங்டன் டிசியில், 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் நான்கு பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஜோ பைடனிடம், ட்ரம்ப் தோல்வி அடைந்துள்ளார். ஆனால் அவரது தோல்வியை ட்ரம்ப் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.

அமெரிக்க அதிபர்களைத் தேர்ந்தெடுக்கும் அமைப்பான தேர்வுக் குழு, இன்று (14/12/2020) பைடனின் வெற்றியை அங்கீகரிக்க உள்ளது.

தேர்வுக் குழுவின் 232 வாக்குகளை ட்ரம்ப் பெற்றுள்ளார், 306 வாக்குகளை பைடன் பெற்றுள்ளார். மக்கள் அளிக்கும் வாக்குகளிலும் ட்ரம்பை விட ஏழு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பைடன் பெற்றுள்ளார்.

இரு தரப்பு ஆர்ப்பாட்டக்காரர்களையும் விலக்கி வைக்கக் காவலர்கள் முயன்றுள்ளனர். ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ போராட்டங்கள் நடைபெற்ற பகுதியில் (Black Lives Matter Plaza) ட்ரம்புக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி இருந்தனர். இரு தரப்பையும் விலக்குவதற்காக இப்பகுதியைக் காவலர்கள் முடக்கியுள்ளனர்.

ட்ரம்ப் தரப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘ஸ்டாப் தி ஸ்டீல்’ என்ற பதாகையின் கீழ் அணிதிரண்டனர். தீவிர வலதுசாரிகளான ‘ப்ரௌட் பாய்ஸ்’ குழுவின் உறுப்பினர்களும் இவர்களுடன் இணைந்துகொண்டனர்.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான விவாதத்தின் போது, “குழு பின்னால் துணையாக நிற்க வேண்டும்” என்று கூறி ட்ரம்ப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், அதற்குப் பின் அவர் “அனைத்து வெள்ளை மேலாதிக்கவாதிகளையும்” கண்டித்துள்ளார்.

இரு தரப்பையும் விலக்கி வைத்திருந்த போதும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது வன்முறையும் வெடித்துள்ளது.

வாஷிங்டன் மாநிலத்தின் தலைநகரான ஒலிம்பியாவிலும், அட்லாண்டா மற்றும் மினசோட்டாவின் செயின்ட் பால் ஆகிய இடங்களிலும் பேரணிகள் நடைபெற்றுள்ளன. இரு குழுக்களும் மோதியதால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஒலிம்பியாவில் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற பேரணியில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், நவம்பர் 14-ம் தேதி நடைபெற்ற இதேபோன்ற ஆர்ப்பாட்டத்தை ஒப்பிடும் பொது இது குறைவுதான் என்று இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் சில பங்கேற்பாளர்கள் மட்டுமே முகக்கவசங்கள் அணிந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்