அசாம் மாநில பாஜகவால் அவர்களின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதையே இன்னும் தீர்மானிக்க முடியவில்லை என்றும் அவர்களால் தம் கட்சியைச் சேர்ந்த தற்போதைய முதல்வரை மதித்து, அவரின் பெயரை தைரியமாக உச்சரிக்க முடியவில்லை என்றும் உத்தரபிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
நேற்று (மார்ச் 22) அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரியங்கா காந்தி, “பாஜக ஆளும் அசாம் மாநில அரசில், சகுனி, திருதராஷ்டிரர் போன்ற தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருமே இம்மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.” என்று விமர்சித்துள்ளார்.
மகாபாரத இதிகாசத்தில், சகுனி கதாபாத்திரம் அரசியல் வித்தைக்காரராகவும் திருதராஷ்டிரர் கதாபாத்திரம் பார்வையற்ற ஆட்சியாளராகவும் எழுதப்பட்டிருக்கும். அசாம் பாஜக தலைவர்களின் பெயர்களை நேரடியாக குறிப்பிடாமல், அவர்களை இந்த கதாபாத்திரங்களாக சித்தரித்து, பிரியங்கா காந்தி மறைமுகமாக பேசியுள்ளார்.
மேலும், “ஒரு காலத்தில் மக்களின் நாயகன் என்று அழைக்கப்பட்ட திருதராஷ்டிரர், பழங்குடியினர் பட்டியலில் ஆறு சமூகங்களை இணைப்பதாக உறுதியளித்து, பின் அதை செய்யாது அவர்களுக்கு துரோகமிழைத்தார். மறுபுறம், ஏனைய தலைவர்கள், ஊழல் அரசை நடத்தி மக்களை ஏமாற்றும் சகுனி மாமாக்களை போன்றவர்கள்.” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“பாஜகவால் அவர்களின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதையே இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. அவர்களால் தம் கட்சியைச் சேர்ந்த தற்போதைய முதல்வரை மதித்து, அவரின் பெயரை தைரியமாக உச்சரிக்க முடியாது. அந்தக் கட்சியிலேயே ஒற்றுமை இல்லாவிட்டால், அது எப்படி அசாம் மக்களுக்குள் ஒற்றுமையை வளர்க்கும்?” என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.